search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "avani thiruvizha"

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    குமரியில் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை தெப்பத்திருவிழாவும், மார்கழி பெருந்திருவிழாவும், மாசி திருக்கல்யாண திருவிழாவும் தாணுமாலயசாமிக்கு நடைபெறுகிறது.

    ஆவணி மாதத்திருவிழா மூலவராகிய தாணுமாலயனை அடுத்துள்ள திருவேங்கிட விண்ணவப்பெருமாளுக்கு நடைபெறுகிறது. இக்கோவிலில் இருகொடிமரங்கள் உள்ளது. சித்திரை மற்றும் மார்கழி திருவிழாவின்போது தாணுமாலயசாமி சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படும். ஆவணித்திருவிழாவின்போது திருவேங்கிட விண்ணவப்பெருமாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கணபதிஹோமம், காலை 9.45 மணிக்கு திருவேங்கிட விண்ணவப்பெருமாள் சன்னதியில் இருந்து மேளதாளத்துடன் கொடிப்பட்டத்தை எடுத்துவந்து சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் பூஜைகள் செய்யப்பட்டு மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ கொடியை ஏற்றினார். அதைத்தொடர்ந்து கொடிபீடத்திற்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் அன்புமணி, வட்டபள்ளிமடம் ஸ்தானிகர் சர்மா, தெற்குமண்மடம் திலீபன் நம்பூதிரி, சுசீந்திரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேஷ், திருக்கோவில் பணியாளர்கள், பக்தர் சங்கத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    திருவிழாவையொட்டி தினமும் காலை 8 மணிக்கும், இரவு 7 மணிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரண்டு அம்பாளும் பெருமாளும் எழுந்தருளி விதவிதமான வாகனங்களில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து அபிஷேகங்கள், சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனைகள் ஆகியவை நடக்கிறது.

    9-ம் நாள் திருவிழாவான வருகிற 22-ந்தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரண்டு அம்பாளும், பெருமாளும் அலங்கரிக்கப்பட்ட இந்திரன் தேராகிய சப்பரத்தேரில் எழுந்தருளச் செய்து நான்கு ரதவீதிகள் வழியே மேளதாளங்கள் முளங்க கோலாகலமாக பக்தர்கள் இழுத்து வருவார்கள்.

    10-ம் நாள் திருவிழாவான 23-ந் தேதி பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி விஷ்ணுபகவான் அதிகாலை 4 மணியளவில் பசு கன்றுகுட்டி முகத்தில் விழித்து எழுதல், தொடர்ந்து 4.30 மணிக்கு பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர். 
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    நேற்று 8-ம் திருநாளை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலையில் சுவாமி சண்முகர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் வெண்பட்டு அணிந்து, வெள்ளை மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சாத்தி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. மதியம் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி, பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பெருமாள் அம்சமாக எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    9-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, தேர் கடாட்சம் அருளி, எட்டு வீதிகளிலும் வலம் வந்து மேலக் கோவில் சேர்கிறார்கள்.

    10-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இரவில் சுவாமி-அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி, வீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், வள்ளி அம்பாள் இந்திர விமானத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவின் 6-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    மாலையில் கீழ ரத வீதியில் உள்ள திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி குமரவிடங்க பெருமான்- வள்ளி அம்பாள் மற்றும் ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இரவில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், வள்ளி அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    7-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முகவிலாச மண்டபத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

    பின்னர் சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளுகிறார்.

    8-ம் திருநாளான நாளை (வியாழக்கிழமை) அதிகாலையில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும், காலை 10.30 மணிக்கு பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். 10-ம் திருநாளான 8-ந்தேதி(சனிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    ×