search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "susindram"

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நிறைபுத்தரிசி பூஜையையொட்டி பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
    பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் விவசாயம் செழிக்கவும், நாடு செழிப்படைய வேண்டியும் நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நிறைபுத்தரிசி பூஜை நேற்று நடந்தது.

    இதையொட்டி அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்களை அறுவடை செய்து சன்னதி தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் அதிகாலை 5.30 மணிக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தாணுமாலயசாமி சன்னதி முன் வைத்தனர்.

    பின்னர், சாமிக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்த பின்பு அந்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி வழங்கினார். பக்தர்கள் அந்த நெற்கதிர்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு நெற்கதிர்களை கொண்டு செல்வதால் நெற்கதிர்கள் செழித்து வளர்வது போன்று தங்களது வாழ்வும் செழிப்படையும் என்பது ஐதீகம் ஆகும்.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    5-ம் திருவிழாவான 19-ம் தேதி அதிகாலை கருட தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் உமா மகேஸ்வரரும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், கருட வாகனத்தில் பெருமாளும் மற்றும் உற்சவ மூர்த்திகளும் வெளியே வந்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை 9.30 மணிக்கு நடந்தது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், விநாயகர் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வந்தன. அம்மன் தேரை ஏராளமான பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர். இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும், நாளை அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், சுசீந்திரம் தெய்வீக இயல் இசை நாடக சங்கத்தினரும் செய்துள்ளனர்.  
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலையில் கொடிபட்டத்தை கோட்டார் - இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து பட்டாரியர் சமுதாயத்தினர் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

    கொடியேற்று விழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன. காலை 8.45 மணி அளவில் கொடிபட்டத்தை மேளதாளத்துடன் ஊர்வலமாக நான்கு ரதவீதிகள் வழியே கொண்டுசென்று மீண்டும் கோவிலுக்குள் கொண்டு வந்தனர்.

    நேற்று காலை 9.35 மணிக்கு மேளதாளம், பஞ்சவாத்தியத்துடன் கொடிபட்டத்தை கொடிமரத்தில் திலீபன் நம்பூதிரி ஏற்றிவைத்தார். பின்னர் கொடிபீடத்திற்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனையும் வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சர்மா செய்தார். பின்னர் தேர்களுக்கு கால்கோள் விழா நடந்தது.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், ஆஸ்டின் எம்.எல்.ஏ., குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், நகர செயலாளர் சந்துரு, ஆ.கே.ஆறுமுகம், நாகத்தாய், சாஜின் காந்தி, ஒன்றிய செயலாளர் மதியழகன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேஷ், சுவாமி பத்மேந்த்ரா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், பேரூராட்சி செயல்அலுவலர் எட்வின் ஜோஸ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    கொடியேற்றம் முடிந்த பின்னர் பக்தர்கள் சங்கம் சார்பில் கோவிலில் இருந்து ரதவீதிகள் வழியே திருமுறை பேரவை ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் திருவாவடுதுறை ஆதீனம் சென்றடைந்தது. தொடர்ந்து தம்பையா ஓதுவாரின் திருவெம்பாவை பாராயண நிகழ்ச்சி நடந்தது. பின்னர், கோவில் கலையரங்கத்தில் சுசீந்திரம் தெய்வீக இயல் இசை நாடகத்தினர் சார்பில் நிகழ்ச்சிக்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மார்கழி திருவிழா வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, இன்னிசைக் கச்சேரி போன்றவை நடைபெறுகிறது.

    9-ம் திருவிழாவான 22-ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய தேர்கள் உலா வருகின்றன. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவார்கள். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகமும், பக்தர்களும், சுசீந்திரம் தெய்வீக இயல் இசை நாடக சங்கமும், ஊர் பொதுமக்களும் இணைந்து செய்துள்ளனர்.

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் மார்கழி திருவிழாவையொட்டி மாவட்ட கலெக்டர் பிரசாத் வடநேரே உத்தரவின்பேரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தேரோடும் ரதவீதிகளில் செப்பனிடும் பணி நடந்தது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதி பேரூராட்சி நிர்வாகத்தினரால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை சார்பில் கோவில் தெப்பக்குளத்தில் பைபர் படகுகளுடன் தீயணைப்பு துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுசீந்திரம் புறவழிச்சாலையில் வாகனங்கள் திருப்பிவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா வருகிற 14-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான மார்கழித்திருவிழா வருகிற 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. முன்னதாக 13-ந்தேதி காலை 18 பிடாகைகள், ஊர் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடி பட்டத்தை மேளதாளம் முழங்க முத்துக்கொடை ஏந்தி வந்து திருக்கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவில் முதல் நாளான 14-ந்தேதி காலை 6 மணிக்கு மாணிக்கவாசகர் பூஜை, 9.15 மணிக்கு மேல் தாணுமாலய சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் தெற்கு மண்மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைக்கிறார். வட்டபள்ளி மடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகள் செய்கிறார். தொடர்ந்து திருமுறை பெட்டக ஊர்வலம், திருவெம்பாவை பாராயணம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு தேவார இன்னிசை, 7 மணிக்கு சமய சொற்பொழிவு, 8.30 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் ஆகியவை நடைபெறுகிறது.

    15-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் வீதி உலா வருதல், 8 மணிக்கு பூங்கோவில் வாகனத்தில் சந்திர சேகரர் வீதி உலா வருதலும், மாலை 5 மணிக்கு பக்தி இன்னிசை, 6.30 மணிக்கு சமய சொற்பொழிவு, 8.30 மணிக்கு பக்தி இன்னிசை, 9.30 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சாமி வீதி உலா வருதல் நடக்கிறது.

    16-ந்தேதி காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சாமி வீதி உலா வருதல், 8.30 மணிக்கு திருவெம்பாவை இசை, மாலை 5 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7.30 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி, 10.30 மணிக்கு சாமி வீதி உலா வரும்போது, கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிசாமி, வேளிமலை குமாரசாமி, தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காணவரும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    17-ந்தேதி காலை 8 மணிக்கு பூதவாகனத்தில் சாமி வீதி உலா வருதல், மாலை 6 மணிக்கு நெல்லை கண்ணனின் ஆன்மிக சொற்பொழி, இரவு 9 மணிக்கு கர்நாடக இன்னிசை, 10.30 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது.

    18-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனம், காலை 6 மணிக்கு வீரமார்த்தாண்ட விநாயகர் கோவில் முன் சாமி, அம்பாள், பெருமாள், மும்மூர்த்திகளை கருடன் வலம் வரும் அற்புத காட்சியும், மாலை 5 மணிக்கு யானை ஸ்ரீபலி, 5.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து சாமிக்கு அஷ்டாபிஷேகமும், 6.30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 8.30 மணிக்கு வீணை இசைக்கலைஞர் ராஜேஷ்வைத்திய நாதனின் இன்னிசை, 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது.

    19-ந்தேதி காலை 8 மணிக்கு பூங்கோவில் வாகனத்தில் சாமி உலா வருதல், மாலை 5 மணிக்கு யானை ஸ்ரீபலி, 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7.30 மணிக்கு கத்ரி கோபால்நாத்தின் இன்னிசை, 10 மணிக்கு இந்திர வாகனத்தில் சாமி வீதி உலா வருதல் நடக்கிறது.

    20-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு பல்லக்கில் சாமி உலா வருதல், மாலை 6.30 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி, இரவு 10.30 மணிக்கு கைலாசபர்வத வாகனத்தில் சாமி வீதி உலா வருதல் நடக்கிறது.

    21-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதி உலா வருதல், பேரம்பலம் கோவில் முன் நடராஜர் பெருமாள் ஆனந்த திருநடன காட்சியும், காலை 10 மணிக்கும், மாலை 4 மணிக்கும் நடராஜர் பெருமானுக்கும், சிவகாமி அம்மனுக்கும் அலங்கார மண்டபத்தில் வைத்து அஷ்டாபிஷேகமும், மாலை 6.30 மணிக்கு இலக்கிய பேரூரையும், இரவு 8 மணிக்கு பரத நாட்டிய நிகழ்ச்சியும், தொடர்ந்து சிதம்பரேஸ்வரர் வீதி உலா வருதலும் நடக்கிறது.

    22-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர் பிட்சாடனராக வீதி உலா வருதல், காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் சாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய 3 தேர்கள் உலா வருகின்றன. இரவு 6.30 மணிக்கு போக்குவரத்து ஊழியர்களின் சார்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி, மெல்லிசை நிகழ்ச்சி, 10 மணிக்கு இசை சங்கம், நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி நடக்கிறது.

    23-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஆரூத்ரா தரிசனம், மாலை 5 மணிக்கு நடராஜர் மூர்த்தி வீதி உலா, 6.30 மணிக்கு பக்தி இன்னிசை, இரவு 9 மணிக்கு ஆராட்டு விழா ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், பக்தர்களும், சுசீந்திரம் தெய்வீக இயல்இசை நாடக சங்கமும் இணைந்து செய்து வருகிறார்கள்.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    குமரியில் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை தெப்பத்திருவிழாவும், மார்கழி பெருந்திருவிழாவும், மாசி திருக்கல்யாண திருவிழாவும் தாணுமாலயசாமிக்கு நடைபெறுகிறது.

    ஆவணி மாதத்திருவிழா மூலவராகிய தாணுமாலயனை அடுத்துள்ள திருவேங்கிட விண்ணவப்பெருமாளுக்கு நடைபெறுகிறது. இக்கோவிலில் இருகொடிமரங்கள் உள்ளது. சித்திரை மற்றும் மார்கழி திருவிழாவின்போது தாணுமாலயசாமி சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படும். ஆவணித்திருவிழாவின்போது திருவேங்கிட விண்ணவப்பெருமாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கணபதிஹோமம், காலை 9.45 மணிக்கு திருவேங்கிட விண்ணவப்பெருமாள் சன்னதியில் இருந்து மேளதாளத்துடன் கொடிப்பட்டத்தை எடுத்துவந்து சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் பூஜைகள் செய்யப்பட்டு மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ கொடியை ஏற்றினார். அதைத்தொடர்ந்து கொடிபீடத்திற்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் அன்புமணி, வட்டபள்ளிமடம் ஸ்தானிகர் சர்மா, தெற்குமண்மடம் திலீபன் நம்பூதிரி, சுசீந்திரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேஷ், திருக்கோவில் பணியாளர்கள், பக்தர் சங்கத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    திருவிழாவையொட்டி தினமும் காலை 8 மணிக்கும், இரவு 7 மணிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரண்டு அம்பாளும் பெருமாளும் எழுந்தருளி விதவிதமான வாகனங்களில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து அபிஷேகங்கள், சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனைகள் ஆகியவை நடக்கிறது.

    9-ம் நாள் திருவிழாவான வருகிற 22-ந்தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரண்டு அம்பாளும், பெருமாளும் அலங்கரிக்கப்பட்ட இந்திரன் தேராகிய சப்பரத்தேரில் எழுந்தருளச் செய்து நான்கு ரதவீதிகள் வழியே மேளதாளங்கள் முளங்க கோலாகலமாக பக்தர்கள் இழுத்து வருவார்கள்.

    10-ம் நாள் திருவிழாவான 23-ந் தேதி பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி விஷ்ணுபகவான் அதிகாலை 4 மணியளவில் பசு கன்றுகுட்டி முகத்தில் விழித்து எழுதல், தொடர்ந்து 4.30 மணிக்கு பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர். 
    ×