search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
    X
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா தொடங்கியது

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலையில் கொடிபட்டத்தை கோட்டார் - இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து பட்டாரியர் சமுதாயத்தினர் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

    கொடியேற்று விழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன. காலை 8.45 மணி அளவில் கொடிபட்டத்தை மேளதாளத்துடன் ஊர்வலமாக நான்கு ரதவீதிகள் வழியே கொண்டுசென்று மீண்டும் கோவிலுக்குள் கொண்டு வந்தனர்.

    நேற்று காலை 9.35 மணிக்கு மேளதாளம், பஞ்சவாத்தியத்துடன் கொடிபட்டத்தை கொடிமரத்தில் திலீபன் நம்பூதிரி ஏற்றிவைத்தார். பின்னர் கொடிபீடத்திற்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனையும் வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சர்மா செய்தார். பின்னர் தேர்களுக்கு கால்கோள் விழா நடந்தது.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், ஆஸ்டின் எம்.எல்.ஏ., குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், நகர செயலாளர் சந்துரு, ஆ.கே.ஆறுமுகம், நாகத்தாய், சாஜின் காந்தி, ஒன்றிய செயலாளர் மதியழகன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேஷ், சுவாமி பத்மேந்த்ரா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், பேரூராட்சி செயல்அலுவலர் எட்வின் ஜோஸ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    கொடியேற்றம் முடிந்த பின்னர் பக்தர்கள் சங்கம் சார்பில் கோவிலில் இருந்து ரதவீதிகள் வழியே திருமுறை பேரவை ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் திருவாவடுதுறை ஆதீனம் சென்றடைந்தது. தொடர்ந்து தம்பையா ஓதுவாரின் திருவெம்பாவை பாராயண நிகழ்ச்சி நடந்தது. பின்னர், கோவில் கலையரங்கத்தில் சுசீந்திரம் தெய்வீக இயல் இசை நாடகத்தினர் சார்பில் நிகழ்ச்சிக்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மார்கழி திருவிழா வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, இன்னிசைக் கச்சேரி போன்றவை நடைபெறுகிறது.

    9-ம் திருவிழாவான 22-ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய தேர்கள் உலா வருகின்றன. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவார்கள். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகமும், பக்தர்களும், சுசீந்திரம் தெய்வீக இயல் இசை நாடக சங்கமும், ஊர் பொதுமக்களும் இணைந்து செய்துள்ளனர்.

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் மார்கழி திருவிழாவையொட்டி மாவட்ட கலெக்டர் பிரசாத் வடநேரே உத்தரவின்பேரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தேரோடும் ரதவீதிகளில் செப்பனிடும் பணி நடந்தது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதி பேரூராட்சி நிர்வாகத்தினரால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை சார்பில் கோவில் தெப்பக்குளத்தில் பைபர் படகுகளுடன் தீயணைப்பு துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுசீந்திரம் புறவழிச்சாலையில் வாகனங்கள் திருப்பிவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×