ஆன்மிகம்
எடப்பாடி மேட்டுமாரியம்மன் கோவிலில் தீ மிதித்த பக்தர்களை படத்தில் காணலாம்.

எடப்பாடி மேட்டு மாரியம்மன்-ஓம்காளியம்மன் திருவிழா: 5 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்தனர்

Published On 2017-08-11 03:23 GMT   |   Update On 2017-08-11 03:23 GMT
எடப்பாடி மேட்டு மாரியம்மன், க.புதூர் ஓம்காளியம்மன் திருவிழாவையொட்டி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
எடப்பாடி மேட்டு மாரியம்மன் கோவில், க.புதூர் ஓம்காளியம்மன் கோவில்களில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து யாக குண்டத்தில் இருந்து தீ எடுக்கப்பட்டு கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்துக்கு வைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று அதிகாலை கோவில் நிர்வாகிகள் தலைமையில் கரகக்காரர்கள், காணியாசிக்காரர்கள் மேளதாளத்துடன் ஆற்றுக்கு சென்று பூங்கரகம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து தீக்குண்டம் முன்பு பூஜைகள் செய்தனர்.

முதலில் கரக்காரர் சுப்பிரமணி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தார். அவரைத் தொடர்ந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் நின்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அப்போது சில பக்தர்கள் எலுமிச்சை உள்ளிட்ட பழவகைகளையும், தேங்காய் கொத்துக்களையும் உடலில் அலகு குத்திக்கொண்டு தீ மிதித்தார்கள். கார், வேன் போன்ற வாகனங்களையும் அலகு குத்தி இழுத்து வந்தனர்.

இதையடுத்து பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டார்கள். இதேபோல் ஆலச்சம்பாளையம், கவுண்டம்பட்டி, சின்னமணலி, வெள்ளாண்டிவலசை, பழையபேட்டை, புதுப்பேட்டை, நடுத்தெரு ஆகிய இடங்களில் உள்ள மாரியம்மன் கோவில்களிலும் ஆடித்திருவிழாவை முன்னிட்டு பூங்கரக ஊர்வலம் மேளதாளத்துடன் நடைபெற்றது.

ஊர்வலத்தில் பங்கேற்ற ஆண், பெண் பக்தர்கள் அம்மன் வேடமணிந்து ஆடியபடி சென்றனர். பெண்கள் அக்னிகரகம், மாவிளக்கு எடுத்து வந்தும், பொங்கல் வைத்தும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். விழாவையொட்டி இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
Tags:    

Similar News