ஆன்மிகம்

பனவடலிசத்திரம் அருகே அக்னி மாலையம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா

Published On 2017-07-27 03:27 GMT   |   Update On 2017-07-27 03:27 GMT
பனவடலிசத்திரம் அருகே உள்ள வடக்கு மாவிலியூத்து செண்பகவிநாயகர் அக்னி மாலையம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
பனவடலிசத்திரம் அருகே உள்ள வடக்கு மாவிலியூத்து செண்பகவிநாயகர் அக்னி மாலையம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் கோவில் கொடை விழா சிறப்பாக நடைபெறும். விழாவையொட்டி பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

விழாவையொட்டி அக்னி மாலையம்மனுக்கு குற்றால தீர்த்தம் எடுத்தல், பால்குடம் எடுத்தல், அம்மனுக்கு சந்தன அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு நெருப்பு குண்டம் அமைக்கப்பட்டு அக்னி வளர்க்கப்பட்டது. இதில் 2 சிறுமிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

தொடர்ந்து 3 மணி நேரம் பூக்குழி திருவிழா நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்கள் அருள்வாக்கு கேட்டல், பொங்கலிடுதல், மாவிளக்கு எடுத்தல், பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துதல், கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெற்றது. இக்கோவில் பூக்குழி திருவிழாவில், எரிகிற நெருப்பில் பக்தர்கள் இறங்கி செல்வது மெயிர் சிலிர்க்க வைப்பதாகும்.
Tags:    

Similar News