ஆன்மிகம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை 30-ந்தேதி நடக்கிறது

Published On 2017-07-26 07:22 GMT   |   Update On 2017-07-26 07:22 GMT
உலக புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
உலக புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக இந்த நிறை புத்தரிசி பூஜை சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான ஆடி நிறை புத்தரிசி பூஜை வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணி முதல் 6.15 மணி நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக்கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின்ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலில் கொண்டு வந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

அதன்பிறகு அந்த நெற்கதிர்கள் அங்கு இருந்து மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. தொடர்ந்து, நெற்கதிர்களை பகவதிஅம்மன் முன் மூலஸ்தான மண்டபத்தில் படைத்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படுகிறது. இதையடுத்து அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவற்றை தங்கள் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் வைத்தால் இல்லத்தில் செல்வசெழிப்பு ஏற்படும் என்பதும், விளை நிலங்களில் அந்த நெல்மணிகளை தூவினால் அந்த ஆண்டு பயிர்கள் செழித்து வளரும் என்பதும் ஐதீகம். எனவே இந்த நெற்கதிர் பிரசாதம் வாங்குவதற்காக ஏராளமான பக்தர்கள் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் கூடுவார்கள்.

நிறைபுத்தரிசி பூஜையையொட்டி அன்று அதிகாலையில் நிர்மாலய பூஜை, விசுவரூப தரிசனம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மதியம் அன்னதானம், மாலையில் சாயராட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்லக்கில் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வருதல் ஆகியவை நடக்கிறது. மேலும், பகவதிஅம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் பாரதி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவகுமார், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகதரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News