ஆன்மிகம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ரூ.7 கோடி செலவில் அமையும் ராஜகோபுரம்

Published On 2017-07-22 04:44 GMT   |   Update On 2017-07-22 04:44 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டு ரூ.7 கோடி செலவில் பிரமாண்டமாக ராஜகோபுரம் அமைய உள்ளது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாதது பக்தர்களுக்கு பெரும் குறையாக உள்ளது. இங்கு ராஜகோபுரம் அமைக்க அடித்தளம் அமைத்து பெரிய தூண்கள் அமைத்த நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு நன்கொடையாளர்கள் மூலம் ராஜகோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.7 கோடி செலவில் 161 அடி உயரத்தில் 9 நிலைகளுடன் பிரமாண்டமாக ராஜகோபுரம் அமைய உள்ளது. இதன் பக்கவாட்டு அகலம் 58 அடியிலும், முகப்பு நீளம் 116 அடியிலும் அமைக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் அமைப்பதற்காக இந்து அறநிலையத்துறை தலைமை ஸ்தபதியான முத்தையா இந்த கோவிலை பார்வையிட்டு வரைபடமும் தயார் செய்துள்ளார். மேலும், குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் பாரதி உத்தரவின் பேரில் குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக பொறியாளர் ராஜ்குமார், நெல்லை மண்டல ஸ்தபதி செந்தில், பகவதி அம்மன் கோவில் தலைமை கணக்கர் ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் ராஜகோபுரம் அமையும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Tags:    

Similar News