ஆன்மிகம்

சோமநாதேஸ்வரர் - கவுரி அம்மன் திருக்கல்யாண வைபவ விழா

Published On 2017-07-17 04:56 GMT   |   Update On 2017-07-17 04:56 GMT
சோமநாதேஸ்வரர் கோவிலில் உள்ள சோமநாதேஸ்வரர் சாமிக்கு திருக்கல்யாண வைபவ விழா பட்டைக்கோவில் அருகே உள்ள பிரசன்ன வரதராஜபெருமாள் தேவஸ்தான வசந்த மண்டபத்தில் நடந்தது.
சேலம் அம்மாபேட்டை நாமமலையில் பஞ்சமுக சோமநாதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சோமநாதேஸ்வரர் சாமிக்கு 12-ம் ஆண்டாக திருக்கல்யாண வைபவ விழா பட்டைக்கோவில் அருகே உள்ள பிரசன்ன வரதராஜபெருமாள் தேவஸ்தான வசந்த மண்டபத்தில் நேற்று நடந்தது. அதையொட்டி 108 சங்காபிஷேகமும், சோமநாதேஸ்வரர்-கவுரி அம்மன் திருக்கல்யாண வைபவமும் நடந்தது.

ரிஷப வாகனத்தில் உற்சவ மூர்த்தி சாமிகள் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர், 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தை காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு தேவஸ்தான வசந்த மண்டபத்தில் இருந்து சாமி திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் அலங்கார நந்தி வாகன ரதத்தில் மின்விளக்கு ஜோடனையுடன், சிவனடியார்களின் கயிலை வாத்தியம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக நாமமலையில் உள்ள சோமநாதேஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News