ஆன்மிகம்

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை நடக்கிறது

Published On 2017-06-29 03:45 GMT   |   Update On 2017-06-29 03:45 GMT
லால்குடியில் பெருந்திரு பிராட்டியார் உடனுறை சப்தரிஷீஸ்வரர் கோவில் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
லால்குடியில் பெருந்திரு பிராட்டியார் உடனுறை சப்தரிஷீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி சுவாமி- அம்பாளுக்கு அன்று காலை 10 மணிக்கு பால், தேன், பன்னீர், பழங்கள் உள்பட பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாலை 7 மணிக்கு நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி 4 வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த கோவிலின் கும்பாபிஷேக திருப்பணிக்காக கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த 4-ந்தேதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பின்னர் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் ஜெயப்பிரியா, செயல் அலுவலர் ராமமூர்த்தி தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News