ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவ விழா 29-ந்தேதி தொடங்குகிறது

Published On 2017-06-23 10:22 GMT   |   Update On 2017-06-23 10:22 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆனி ஊஞ்சல் உற்சவ திருவிழா 29-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஆனி ஊஞ்சல் உற்சவ திருவிழாவும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழா வருகிற 29-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

விழாவை முன்னிட்டு தினமும் இரவு 7 மணியளவில், மேளதாளங்கள் முழங்க உற்சவர், முருகன்-தெய்வானையுடன் ஆஸ்தான மண்டபத்தை சுற்றி வந்து திருவாச்சி மண்டபத்தில் அமைக்கப்பட்ட விஷேச ஊஞ்சலில் எழுந்தருளுவார்.

அங்கு கோவில் ஓதுவார்கள் பொன்னூஞ்சல் பாடல் பாட சுவாமிக்கு சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெறும்.



வருகிற ஜூலை 7-ந் தேதி வரை தினமும் முருகன் தெய்வானையுடன் ஊஞ்சலில் எழுந்தருளி அருள்பாலிப்பார். விழாவின் 10-ம் நாளான (8-ந் தேதி) முப்பழ பூஜை நடைபெறும்.

அன்றைய தினம் பகல் 12 மணியளவில் உச்சிகால வேளையில் மூலஸ்தானத்தில் உள்ள முருகன், துர்க்கை, கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய அனைத்து சன்னதிகளிலும் மா, பலா, வாழை ஆகிய முப்பழங்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News