ஆன்மிகம்
திருஞானசம்பந்தர் முத்துபல்லக்கில் எழுந்தருளி வீதி உலாவாக கைலாசநாதர் கோவிலுக்கு சென்ற காட்சி.

தேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துப்பந்தல் விழா

Published On 2017-06-16 07:39 GMT   |   Update On 2017-06-16 07:39 GMT
பட்டீஸ்வரம் தேனு புரீஸ்வரர் கோவிலில் முத்துப்பந்தல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ் வரத்தில் தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. தேவார பாடலாசிரியர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அப்போது கடும் வெயில் சுட்டெரித்தது. அவர் வெயிலில் நடந்து வருவதை பார்த்த சிவபெருமான் பூதகணங்கள் மூலம் முத்துப்பந்தலை கொடுத்தருளினார்.

இந்த நிகழ்வை நினைவு கூரும் வகையில், ஆண்டு தோறும் வைகாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தையொட்டி முத்துப்பந்தல் விழா நடக்கிறது. அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து கடந்த 4-ந்தேதி திருக்கல்யாணமும், 6-ந்தேதி தேரோட்டமும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துப்பந்தல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட முத்துபல்லக்கில் திருஞானசம்பந்தர் எழுந்தருளினார். இதை தொடர்ந்து பல்லக்கில் வீதி உலாவாக புறப்பட்டு, திருமேற்றிலிகையில் உள்ள கைலாசநாதர் கோவிலுக்கு சென்று, அங்கிருந்து திருசக்தி முற்றத்தில் உள்ள சக்திவனேஸ்வரர் கோவிலுக்கு வந்தடைந்தார்.

பின்னர் அங்கிருந்து அலங் கரிக்கப்பட்ட முத்துப் பந்தலில் திருஞானசம்பந்தர் எழுந்தருளி தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு வந்தடைந்தார். இதையடுத்து தேனுபுரீஸ் வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News