ஆன்மிகம்

ஆனி திருவிழா: நெல்லையப்பர் கோவில் தேருக்கு புதிய அலங்கார துணி

Published On 2017-06-13 05:44 GMT   |   Update On 2017-06-13 05:44 GMT
நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா மற்றும் தேரோட்டம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி சுவாமி தேருக்கு புதிய அலங்கார துணியை ராம்கோ சிமெண்டு நிறுவனம் வழங்கி உள்ளது.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப்பெருந்திருவிழா ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து ஜூலை மாதம் 7-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

தேரோட்டத்தில் விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், சுவாமி தேர், அம்பாள் தேர் மற்றும் சண்டிகேசுவரர் தேர் என மொத்தம் 5 மரத்தேர்கள் இழுக்கப்படும். இதில் சுவாமி தேர் 450 டன் எடையுடையது. தமிழ்நாட்டில் இது 3-வது பெரிய தேர் ஆகும்.


நெல்லையப்பர் கோவில் தேருக்கு புதிய அலங்கார துணிராம்கோ சிமெண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டபோது எடுத்த படம்.


தேரோட்டத்தையொட்டி தேர்களை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இரும்பு தகடுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுவாமி தேருக்கு புதிய அலங்கார துணி வழங்கப்பட்டு உள்ளது. சுவாமி தேர் அலங்கார துணி மிகவும் பழமையானதாகவும், கிழந்தும் காணப்பட்டது. இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் ராம்கோ சிமெண்டு நிறுவன உரிமையாளர் ராமசுப்பிரமணிய ராஜாவிடம் அலங்கார துணி உபயமாக வழங்க கோரப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சென்னை ராம்கோ நிறுவனம் சார்பில் துணை பொது மேலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகி முத்து ஆகியோர் புதிய அலங்கார துணியை நேற்று வழங்கினர். 170 எண்ணங்கள் கொண்ட தேர் துணியை கோவில் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதனை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் ஊழியர்கள் பெற்றுக் கொண்டனர்.
Tags:    

Similar News