ஆன்மிகம்

அன்னை மதுரை மீனாட்சி வரலாறு

Published On 2017-03-30 10:06 GMT   |   Update On 2017-03-30 10:06 GMT
ஒரு வீட்டில் பெண்களின் ஆதிக்கம் நடக்கிறது என்றால் அவ்வீடு “மதுரை’ என பெயர் பெறும் அளவுக்கு மீனாட்சிஅம்மனின் புகழ் கொடிகட்டிப்பறக்கிறது.
கந்தர்வ லோகத்தில் வசித்த விசுவாவஸு என்பவன், சிவனருளால் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அவளுக்கு வித்யாவதி என பெயர் சூட்டி வளர்த்தான். வித்யாவதி சிறு வயதிலேயே அம்பாள் மீது அதீத பக்தி கொண்டாள். ஒரு சமயம் அவளுக்கு பூலோகத்திலுள்ள புண்ணிய தலத்தில் அருளும் அம்பிகையைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை உண்டானது. தன் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். விசுவாவஸு, கடம்பவனம் எனப்பட்ட மதுரை தலத்தைச் சுட்டிக்காட்டி இங்கு அருளும் அம்பிகை சியாமளையை வழிபடும்படி கூறினான்.

அதன்படி அம்பாளைத் தரிசிக்க வித்யாவதி இங்கு வந்தாள். சியாமளாதேவி சன்னதி முன் நின்று மனம் உருக வழிபட்டாள். அந்த தலம் அவளுக்கு மிகவும் பிடித்துப் போகவே அங்கேயே தங்கி சேவை செய்தாள். அவளுக்கு 3 வயது சிறுமியாக காட்சி தந்த அம்பிகை, என்ன வரம் வேண்டும் கேள்! என்றாள். அம்பாளை குழந்தை வடிவில் பார்த்த வித்யாவதி எப்போதும் தான் அவள் மீது பக்தி கொண்டிருக்க வேண்டுமென்றும், குழந்தையாக காட்சி தந்த நீ எனக்கு மகளாகப் பிறக்கும் பாக்கியத்தை தர வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டாள்.

அம்பாள், அவளது விருப்பம் அடுத்த பிறவியில் நிறைவேறும் என்று வாக்களித்தாள். இதன்படி, அடுத்த பிறப்பில் சூரிய வம்சத்தில் வந்த மன்னன் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையாக அவதரித்தாள் வித்யாவதி. அம்பாள் பக்தையாகத் திகழ்ந்த அவளை மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னன் மணம் முடித்தான். இவ்விருவருக்கும் புத்திரப்பேறு இல்லை. காஞ்சனமாலை, இத்தலத்தில் தனக்கு முற்பிறவியில் அருள் செய்த சியாமளையிடம் குழந்தை பாக்கியம் அருளும்படி வேண்டிக் கொண்டாள்.



மன்னனும் புத்திரப்பேறுக்காக, இங்கு புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினான். அம்பிகை, அந்த யாகத்தில் 3 வயது குழந்தையாகத் தோன்றினாள். அப்போது காஞ்சனமாலைக்கு முற்பிறவியில் அவள் வாக்களித்தது நினைவுக்கு வந்தது. மகிழ்ந்த மலையத்துவசனும், காஞ்சனாதேவியும் அவளை சீரும், சிறப்புமாக வளர்த்தனர்.

ஆண் வாரிசு இல்லாத மன்னன், அவளுக்கு ஆயகலைகளையும் கற்றுக்கொடுத்தான். தனக்குப் பின்பு மதுரையை ஆட்சி செய்யும் பொறுப்பையும் ஒப்படைத்தான். இவள் மீன் போல எப்போதும் விழிப்புடன் இருந்து, மதுரையை ஆட்சி செய்ததால், “மீனாட்சி’ என்று பெயர் பெற்றாள்.

இதன்பிறகு சியாமளை என்ற பெயர் மங்கி, மீனாட்சி என்ற பெயரே இவளுக்கு நிலைத்து விட்டது. இவ்வாறு, தன்னை வேண்டிய பக்தைக்கு அருளியவளாக மீனாட்சி அம்பிகை இத்தலத்தில் அருளுகிறாள். இதனால் தான் பெண்களின் தெய்வமாக இவள் கருதப்படுகிறாள். தங்கள் மஞ்சள் குங்குமம் நிலைக்கவும், தைரியமாகப் பேசவும் மீனாட்சியே கதியென பக்தைகள் தவம் கிடக்கின்றனர். ஒரு வீட்டில் பெண்களின் ஆதிக்கம் நடக்கிறது என்றால் அவ்வீடு “மதுரை’ என பெயர் பெறும் அளவுக்கு மீனாட்சிஅம்மனின் புகழ் கொடிகட்டிப்பறக்கிறது.

Similar News