ஆன்மிகம்
சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மஞ்சள், குங்குமம் வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை

Published On 2017-02-23 07:21 GMT   |   Update On 2017-02-23 07:21 GMT
சிவன்மலையில் உள்ள முருகன் கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகள் அதிகமாக நடக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை முருகன் கோவில் உள்ளது. மலைமீது உள்ள இந்த கோவில் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவுபெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியில் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் இரும்புசங்கிலி வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது. மற்ற எந்தக்கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, சிவன்மலை முருகன் கோவிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை இந்த பெட்டியில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம். இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

இவ்வாறு ஆண்டவன் உத்தரவுபெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



இவ்வாறு இதற்கு முன்னர் இந்த ஆண்டவன் உத்தரவுபெட்டியில் ஏர்கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இருந்த பூமாலை அகற்றப்பட்டு இரும்புச் சங்கிலி வைத்து பூஜை செய்யப்பட்டது. இதன் காரணமாகவே அ.தி.மு.க.பொதுச் செயலாளர் சசிகலா சிறை சென்றார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. வாட்ஸ்-அப்பிலும் இது தொடர்பான செய்திகள் வலம் வந்தன.

இந்த நிலையில் தற்போது இரும்புச் சங்கிலி அகற்றப்பட்டு நேற்றுமுதல் மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யப்படு கிறது.

இதை நாகப்பட்டினம் சட்டையப்பர் வடக்கு வீதியை சேர்ந்த ந.வெங்கடேஷ் என்பவர் வைத்துள்ளார். இதுபற்றி பக்தர்கள் கூறும்போது மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யப்படுவதால் நாட்டில் சுபநிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெறும் என நம்புகிறோம். இன்னும் ஒரு சில நாட்களில் இதன் தாக்கம் என்ன என்பது தெரியவரும் என்றார்.

Similar News