ஆன்மிகம்

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-02-20 03:54 GMT   |   Update On 2017-02-20 03:54 GMT
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று மாலை பக்த கண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா 13 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று மாலை 4.30 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தி அருகே கைலாசகிரி மலையில் உள்ள பக்த கண்ணப்பர் கோவிலில் கொடியேற்றம் நடந்தது. முன்னதாக, பிற்பகல் 2 மணியளவில் சிவன் கோவிலில் மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞான பிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோருக்குச் சிறப்புப்பூஜைகள் நடந்தன.

அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோரை பல்லக்கில் வைத்தும், உடுக்கை படம் வரையப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடியை மேள தாளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன் ஸ்ரீகாளஹஸ்தியில் இருந்து பக்த கண்ணப்பர் கோவிலான கைலாசகிரி மலைக்குப் பக்தர்கள், ஊழியர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அங்கு, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க பக்த கண்ணப்பர் கோவில் கொடி மரத்தில் சிவ.. சிவ.. என்ற பக்தி கோஷம் முழங்க அர்ச்சகர்கள் கொடியேற்றினர்.

அதைத்தொடர்ந்து பக்த கண்ணப்பருக்கு அபிஷேக, ஆராதனை, சிறப்புப்பூஜைகள், நைவேத்தியம், தீபாராதனை ஆகியவை நடந்து முடிந்ததும், மங்கள வாத்தியங்கள் முழங்க, கைலாசகிரி மலையில் இருந்து உற்சவ மூர்த்திகளை ஊர்வலமாக ஸ்ரீகாளஹஸ்திக்குக் கொண்டு வந்தனர். சிவன் கோவிலின் நான்குமாட வீதிகளில் உற்சவ மூர்த்திகள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மாலை 6 மணியளவில் தூர்செட்டி கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடக்க விழாவில் எழுத்தாளரும், நடிகருமான கனிகல பரணி கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்துப் பேசினார். இந்தக் கலை நிகழ்ச்சிகள் நள்ளிரவு வரை நடந்தன. இதற்கிடையே, உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோர் இரவு 9 மணியில் இருந்து 10 மணிவரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News