ஆன்மிகம்
பக்தர்கள் பறக்கும் காவடி எடுத்து ஊர்வலமாக சென்ற போது எடுத்த படம்.

செல்லியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

Published On 2017-02-15 05:42 GMT   |   Update On 2017-02-15 05:42 GMT
விருத்தாசலம் செல்லியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலத்தில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி தொடங்குகிறது.

இதற்கு முன்னோட்டமாக மணிமுக்தாற்றங்கரையில் காவல் தெய்வமாக இருந்து வரும் செல்லியம்மனுக்கும், அதை தொடர்ந்து ஆழத்து விநாயகருக்கும் தனித்தனியே 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி கடந்த 7-ந் தேதி காலை செல்லியம்மன் கோவிலில் செடல் உற்சவம், கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து விழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து செல்லியம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.


மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.

நேற்று செடல் திருவிழா நடந்தது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட் களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மணிமுக்தாற்றில் இருந்து பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் அம்மனை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும் பக்தர்கள் பலர் அலகு குத்தியும், பறக்கும் காவடி, செடல் அணிந்தும் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் கிழக்கு கோட்டை வீதி, பாலக்கரை, கடலூர் ரோடு வழியாக வந்து கோவிலை சென்றடைந்தது.

பின்னர் செல்லியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று (புதன்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திருவிளக்கு பூஜையும், 18-ந் தேதி சந்தனகாப்பு அலங்காரமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து 20-ந்தேதி (திங்கட்கிழமை) விருத்தகிரீஸ்வரர் கோவிலின் உள்ளே உள்ள ஆழத்து விநாயகருக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்க இருக்கிறது.

Similar News