ஆன்மிகம்

திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி

Published On 2016-09-23 09:28 GMT   |   Update On 2016-09-23 09:28 GMT
உலகை இயக்கும் இச்சக்தியை தன் மார்பில் கொண்டு திருமகளின் முக்கியத்துவத்தினை திருமால் உணர்த்துகின்றார்.
லட்சுமி என்ற நாமத்தினைச் சொன்னாலே பொன்னும், பொருளும் கொண்ட மகிழ்ச்சியான வாழ்க்கை தான் அனைவரின் மனதிலும் வரும். அதிலும் மகாலட்சுமி என்று சொல்லி பாருங்கள். அனைத்து ஐஸ்வர்யங்களும் அளிக்கும் தாமரையில் வீற்றிருக்கும் பெண் தெய்வம் கண் முன்னே வரும். ஆம் கைகளினால் பொற்காசுகளும், ஆசியும் வழங்கும் பெண் தெய்வமாக மகாலட்சுமி வழிபடப்படுகின்றாள். 

மனித வாழ்வு சுபிட்சமாக இருந்தால் மட்டுமே அது பூரணத்துவம் பெறுகின்றது. ஆகவேத்தான் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் பொழுது கூட தெய்வங்களின் பெயர்களை வைக்கின்றனர். இதன் நோக்கம் அவர்களை கூப்பிடும் பொழுதெல்லாம் நாம் நம்மை அறியாமலேயே தெய்வங்களின் பெயர்களை உச்சரித்து கொண்டிருப்போம் அல்லவா! அவ்வகையில் இந்துக்களின் குடும்பங்களில் வீட்டிற்கு ஒரு பெண்ணாவது ‘லட்சுமி’ என்ற பெயரில் இருப்பார். 

உலகின் உயர் சக்தியாக போற்றப்படும் இந்த லட்சுமி எனும் திருமகள் வாழும் இடம் எங்கு தெரியுமா? திருமாலின் திருமார்புதான். ஆகவேத்தான் ஸ்ரீநிவாசன் என திருமால் குறிப்பிடப்படுகின்றார். ஸ்ரீ-திருமகள்-வாசம் செய்பவள் என குறிப்பிடப்படுகின்றது. உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க துணி என எதைக் கூறினாலும் அவை அனைத்தும் ஸ்ரீலட்சுமியையேச் சாரும். இந்த உலகை இயக்கும் இச்சக்தியை தன் மார்பில் கொண்டு திருமகளின் முக்கியத்துவத்தினை திருமால் உணர்த்துகின்றார்.

இதன் முக்கியத்துவத்தினை மேலும் அறிவோம். பல ரூபங்களில் அம்பிகையினை வழிபடுவது மரபு. அவற்றில் அஷ்ட லட்சுமி ரூபங்களில் வழிபடுவது பிரசித்தமானது. அந்த எட்டு ரூபங்கள். 

* ஆதி லட்சுமி  - மாதா, அன்னை, ஆதிசக்தி
* தன லட்சுமி  - செல்வத்தினை அளிப்பவள்
* தான்ய லட்சுமி  - உணவினை அருள்பவள்
* கஜ லட்சுமி  - இரு புறம் யானைகள் நிற்க காட்சி தரும் இந்த லட்சுமி சக்தியினையும், அதிகாரத்தினை யும் தர வல்லவள். 
* சந்தான லட்சுமி  - நல்ல குழந்தைகளைப் பெறும் வரத்தினை அளிப்பவள்.
* வீர லட்சுமி  - தைரியம் அளிப்பவள். அச்சத்தினை அகற்றுபவள்.
* விஜய லட்சுமி  - வெற்றிகளை குவிப்பவள்
* ஐஸ்வர்யலட்சுமி  - சகல சவுபாக்கி யங்களையும் அளிப்பவள்.

அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரத்தில்

* ஆதி லட்சுமி
* தான்ய லட்சுமி
* தைரிய லட்சுமி  - வீரமும், பொறுமையும் அளிப்பவள்.
* கஜ லட்சுமி
* விஜய லட்சுமி
* வித்யா லட்சுமி  - வளம், ஞானம், அறிவு தருபவள்
* தன லட்சுமி

என குறிப்பிடப்பட்டுள்ளது. 

வித்யா லட்சுமியினை ஜெயலட்சுமி என்றும் குறிப்பிடுவதும் உண்டு. லட்சுமியின் மேலும் சில வழிபாட்டு ரூபங்களையும் பார்க்கலாம். 

* சவுபாக்ய லட்சுமி
* ராஜ்ய லட்சுமி  - சொத்து, ராஜ வாழ்க்கை தருபவள்
* வர லட்சுமி  - வேண்டும் வரங்களை அளிப்பவள்
* கிரக லட்சுமி
* வைபவ லட்சுமி
* பாக்ய லட்சுமி

இப்படி உலக இயக்கம் அனைத்திற்கும் காரணமாக இருக்கும் ஸ்ரீலட்சுமி திருமாலின் மார்பில் இருந்து இயங்குவது சரிதானே. 
இந்துக் கடவுள்களின் ராணியாகவும், அதிர்ஷ்ட தெய்வமாகவும் வழிபடப்படும் இந்த அம்பாளுக்கு கமலஸ்ரீ, சக்தி, தேவி, சீதா என்ற பெயர்களும் உண்டு. 

இருப்பினும் பிள்ளையார் சுழியான உ என்ற எழுத்தும், செல்வம் தரும் லட்சுமியின் எழுத்தான ஸ்ரீ என்ற எழுத்தினையும் எழுதாத சுப நிகழ்வுகள் இல்லை. 

விஷ்ணு புராணத்தில் ஸ்ரீலட்சுமி பிருகு முனிவரின் மகளாக தோன்றி, அதன் பின் பாற்கடலில் இருந்து வெளி வந்ததாகக் கூறப்படுகின்றது. 

தேவர்களும், அசுரர்களும் தங்களுக்கு அமிர்தம் கிடைக்க வேண்டி மந்த்ரா மலையினை மத்தாக்கி, அதனை கூர்மா ஆமை தாங்க, வாசுகியினை நானாக்கி திருபாற்கடலை கடைந்தனர். அதில் வந்த ஆலகால விஷத்தினை சிவபிரான் விழுங்க அதனை அன்னை பார்வதி தொண்டையில் கை வைத்து கீழே இறங்காது நிறுத்தி விடுகின்றாள். அதனால் தான் சிவபிரானுக்கு நீல கண்டன் என்ற பெயர் வந்தது. 

பின்னர் திருபாற்கடலிலிருந்து ஆயிரம் சூரிய ஒளிபோல் அழகின் பொருளாய் லட்சுமி வெளி வந்தாள். ஸ்ரீலட்சுமியினை மகாவிஷ்ணு மணந்தார். விஷ்ணு பல அவதாரங்களை எடுத்துள்ளார் என படிக்கின்றோம். அறிகின்றோம். இது போன்று அம்பிகை லட்சுமியும் சில அவதாரங்களை எடுத்து விஷ்ணுவை அடைந்துள்ளார். 

வெகு காலம் முன்பு ரதத் வாஜா என்ற அரசன் இருந்தான். அவ்வரசனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அவ்வரசன் சிறந்த லட்சுமி பூஜை செய்து வந்தவன். ஏனோ அந்த பூஜையில் தொடராது விட்டு விட யுத்தத்தில் ரதத் வாஜா தன் நாட்டினை இழந்தான். ரதத் வாஜாவின் மகன்களான குஷத்வாஜாவும், தர்மத்வாஜாவும் அம்பாள் லட்சுமியினை நோக்கி கடும் தவமும் பூஜையும் செய்தனர். 

இழந்த நாட்டினை மீண்டும் பெற வேண்டினர். மேலும் அம்பிகை தங்களுக்கு மகளாக பிறக்க வேண்டும் எனவும் வேண்டினர். ஸ்ரீலட்சுமியும் அவ்வாறே அருள யுத்தத்தில் அவர்கள் இழந்த நாட்டை மீட்டனர். குஷத்வாயாவுக்கு ஒரு மகள் பிறந்தாள். பிறக்கும் பொழுதே வேதத்தினை உச்சரித்த படியே பிறந்ததால் அக்குழந்தைக்கு வேதவதி என பெயரிட்டனர். 

மகா அழகும், அறிவும் கொண்டு வேதவதி வளர்ந்தாள். தெய்வங்களும், அசுரர்களும் அவளை மணக்க விரும்பினர். ஆனால் வேதவதி புஷ்கரா எனும் புனித இடத்திற்குச் சென்று மகா விஷ்ணுவினை அடைய வேண்டிய தவம் இருக்கின்றாள். அப்பொழுது ஓர் அசரிரீ சொன்னது வேதவதி, நீ மறு பிறவி எடுக்க வேண்டும். அப்பிறவியில் மகா விஷ்ணுவினை நீ மணப்பாய்’ என்றது. வேதவதி தன் தவத்தினை தொடர்ந்தாள். 

அவ்விடத்தில் ஆகாயத்தேரில் வந்த ராவணன் வேதவதியினை தன்னோடு வருமாறு கூற கோபம் கொண்ட வேதவதி ‘எனது மறு ஜென்மத்தில் உன் இறப்புக்கு நான் காரணமாய் இருப்பேன்’ என்று கூறி தீயில் குதித்து மறைகின்றாள். அவளே ஜனக மகாராஜாவின் மகள் சீதையாகப் பிறந்து விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமனை மணக்கின்றாள். ராவணனும் அழிந்தான். 

* தர்மத் வாஜா மாதவியின் மகளாக ஒரு பெண் பிறந்தது. அப்பெண்ணுக்கு துளசி என்று பெயரிட்டனர். மகா விஷ்ணு துளசியினை அவளது உடலை நதியாக பூமியில் விட்டு விடச் சொல்ல அந்நதி கண்டகி என்ற நதியானது. அந்நதியில் சாளக்கிரமாக விஷ்ணு வாசம் செய்கின்றார். துளசியின் தலை முடி துளசி செடியாய் வளர்ந்தது. விஷ்ணுவுக்கு மிகவும் ப்ரியமான மாலை துளசி மாலை ஆகவேத்தான் பெருமாள் கோவில் பிரசாதமாக துளசி இலை கொடுக்கப்படுகின்றது. 

* பீஷ்மகா என்ற மன்னன் விதர்மா என்ற அரசை ஆண்டு வந்தான். அவனுக்கு 5 மகன்களும், ருக்மணி என்ற பெண்ணும் இருந்தனர். ருக்மணி மகா விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீகிருஷ்ணரை மணமுடிக்க விரும்பினாள். இதனை ருக்மணியின் அண்ணன் எதிர்த்தாலும் மகாலட்சுமியின் அவதாரமான ருக்மணி மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீகிருஷ்ணரையே மணந்தாள். 

* ஒருமுறை ப்ருகி முனிவர் ஆதிசேஷன் மீது துயில் கொண்டிருந்த மகாவிஷ்ணுவினைக் காணச் சென்றார். கண்ணை மூடி இருந்த விஷ்ணுவினைக் கண்டு கோபம் கொண்டு மகா விஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தார். மகா விஷ்ணுவோ சிறிதும் கோபப்படாமல் பிறகு முனிவரின் காலினை பிடித்துவிட ப்ருகி முனிவரும் சாந்தமானார். 

ஆனால் திருமாலின் மார்பு மகாலட்சுமியின் உறைவிடம். எனவே மகாலட்சுமி மனம் வருந்தி ஒரு ராஜாவின் மகளாக பூமியில் பிறந்து ஸ்ரீநிவாசனாக அவதரித்த பெருமாளினை மணம் புரிந்தாள்.

இப்படி லட்சுமியும் அவதாரங்கள் பல எடுத்துள்ளார். எந்த குளத்தில் பூத்தாலும் தாமரை எப்பொழுதும் சுத்தமாகவே இருக்கும். அத்தகு தாமரையின் மீது அமர்ந்திருப்பவள் மகாலட்சுமி. 

ஆந்தை வாகனம், ஞானத்தின் சின்னம். மகாலட்சுமியே ஸ்ரீதேவி, பூதேவியாக காட்சி அளிக்கின்றாள். 

பத்மா  - தாமரையில் இருப்பவள்
கமலா  - தாமரையில் இருப்பவள்
பத்மப்ரியா  - தாமரையை விரும்புவள்
பத்ம மாலதாரா  - தாமரையினை மாலையாய் அணிபவள்
பத்மாக்ஷீ  - தாமரை போன்ற அழகான கண்களை உடையவள்
பத்மஹஸ்தா  - தாமரை மலரினை கொண்டவள்
பத்ம சுந்தரி  - தாமரை போன்று அழகு மிகுந்தவள்.

இப்படி தாமரையையும் லட்சுமியையும் இணைத்தே கூறப்பட்டுள்ளன. 

புறாக்கள் இருக்கும் இடம், நல்ல குடும்பம், பத்திரமாய் உணவு பாதுகாக்கப்படும் இடம், தர்மம் இருக்கும் இடங்கள் போன்ற நல்ல இடங்களில் லட்சுமி நிலைத்து நீடித்து இருப்பாள் எனக் கூறப்படுகின்றது. 

இத்தகு சிறப்புகள் வாய்ந்த லட்சுமியினை பிரபஞ்சத்தினையே இயக்கும் பெருமாள் தன் திருமார்பில் தாங்குகின்றார். இத்தகு சிறப்புகள் மிகுந்த விஷ்ணுவையும், மகாலட்சுமியையும் நாளை புரட்டாசி மாத சனிக்கிழமையில் ஸ்ரீநிவாசனை லட்சுமிநாராயணனை, லட்சுமி நரசிம்மனை வேண்டி நலன்கள் பெறுவோமாக.

Similar News