கிரிக்கெட்

உலகக் கோப்பையை முத்தமிடும் வீரர்கள் மத்தியில் காலில் வைத்த மிட்செல் மார்ஷ்- கண்ணீர் சிந்தும் ரசிகர்கள்

Published On 2023-11-20 07:08 GMT   |   Update On 2023-11-20 07:08 GMT
  • முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.
  • ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது. இந்த ஆட்டத்தில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றது.

இந்நிலையில் உலகக் கோப்பையை அனைத்து வீரர்களும் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடி பார்த்திருப்போம். முத்தமிடுவதையும் கட்டி அணைப்பதையும் கோப்பை முன் நின்று புகைப்படம் எடுப்பதையும் பார்த்திருப்போம். ஆனால் இந்த முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்த வீரர் மிட்செல் மார்ஷ், தனது காலை கோப்பைக்கு மேல் வைத்து புகைப்படம் எடுத்து கொண்டது கவலையாக இருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த உலகக் கோப்பை இந்திய அணி வென்றிருந்தால் கொண்டாடிருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்திய அணிக்கு கிடைக்க வேண்டிய கோப்பை ஆஸ்திரேலிய அணி வீரர் காலில் இருப்பதை பார்ப்பதற்கு வேதனையாக இருப்பதாக ரசிகர்கள் கண்ணீருடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News