கிரிக்கெட்
null

லீக் சுற்று முடிவடைகிறது: ஐதராபாத்-பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

Published On 2024-05-19 03:54 GMT   |   Update On 2024-05-19 04:02 GMT
  • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இன்றுடன் முடிவடைகிறது.
  • சொந்த மண்ணில் சமாளிப்பது பஞ்சாப் அணிக்கு சவாலாக இருக்கும்.

ஐதராபாத்:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இன்றுடன் முடிவடைகிறது. இன்றைய ஆட்டங்களில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

17-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 69-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விட்ட ஐதராபாத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 15 புள்ளிகள் பெற்றுள்ளது. ஐதராபாத் அணி புள்ளிபட்டியலில் 2-வது இடத்தை பிடிக்க குறிவைக்கும். இந்த சீசனில் 3 முறை 260 ரன்களுக்கு மேல் குவித்துள்ள அந்த அணியின் முந்தைய லீக் ஆட்டம் (குஜராத்துக்கு எதிரான) மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

அதிரடியில் அசத்தும் ஐதராபாத்

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (533 ரன்), அபிஷேக் ஷர்மா (401), ஹென்ரிச் கிளாசென் (339), நிதிஷ் குமார் ரெட்டி என அதிரடி ஆட்டக்காரர்கள் அதிகம் இருக்கிறார்கள். பந்து வீச்சில் நடராஜன், கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட பஞ்சாப் அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 8 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து இருந்தது.

பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங் சிங், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மாவும், பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர், ஹர்பிரீத் பிரார், நாதன் எலிஸ்சும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராக பொறுப்பு கேப்டன் சாம் கர்ரன், பேர்ஸ்டோ ஆகியோர் நாடு திரும்பியதும், காயம் காரணமாக தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா விலகியதும் அந்த அணிக்கு பின்னடைவாகும்.

தோள்பட்டை காயம் காரணமாக முதல் 5 ஆட்டத்துக்கு பிறகு ஒதுங்கிய ஷிகர் தவான் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை ஜிதேஷ் ஷர்மா வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்ட ஐதராபாத் அணி தனது ஆதிக்கத்தை தொடர முயற்சிக்கும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து ஆறுதல் தேட பஞ்சாப் தீவிரம் காட்டும். வலுவான ஐதராபாத்தை அதன் சொந்த மண்ணில் சமாளிப்பது பஞ்சாப் அணிக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் ஐதராபாத்தும், 7-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன.

இந்த ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Tags:    

Similar News