சினிமா

புதிய ‘வெப்சைட்’ அறிமுகம்: விஜய் அரசியலில் குதிப்பாரா? ரசிகர்கள் திடீர் உற்சாகம்

Published On 2018-02-06 07:39 GMT   |   Update On 2018-02-06 07:39 GMT
விஜய் ஆதரவாளர்களை ஒன்று சேர்க்கும் வகையில், ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் புதிய இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் விஜய் அரசியலில் ஈடுபடப்போவதாகவும் கூறப்படுகிறது.
சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவது புதிது அல்ல.

எம்.ஜி.ஆர்., என்.டி.ராம ராவ், தி.மு.க. தலைவர் கருணாநிதி, மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா உள்பட பலர் அரசியலில் இறங்கி சாதனை படைத்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில் களம் இறங்க தயாராக இருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்து இருக்கிறார். வருகிற சட்ட மன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்று கூறியுள்ளார். கமல்ஹாசன் வருகிற 21-ந்தேதி புதிய கட்சி தொடங்குகிறார். அன்றைய தினம் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறார்.

ரஜினி, கமல் அரசியல் பற்றி பேசுவதற்கு முன்பே விஜய் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. தனது மகன் அரசியலுக்கு வருவதை விரும்புவதாக விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் முன்பு கருத்து தெரிவித்து இருந்தார். விஜய் ரசிகர்களும் இதை வரவேற்றனர்.



இதையடுத்து விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அவருடைய படங்களிலும் அரசியல் கருத்துக்கள் இடம் பெற்றன. என்றாலும், விஜய் அரசியலுக்கு வருவது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு அவருடைய ரசிகர்களிடம் உள்ளது.

ரஜினி, கமல் அரசியல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் விஜய் ரசிகர்களும், தங்கள் அரசியல் ஆர்வத்தை வேகப்படுத்தி இருக்கிறார்கள். விஜய் ஆதரவாளர்களை ஒன்று சேர்க்கும் வகையில், ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் புதிய இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பே இந்த இணையதளம் தயாராகிவிட்டது. என்றாலும், ரஜினி, கமல் ரசிகர்கள் தங்கள் கட்சிகளுக்கு உறுப்பினர்களை சேர்த்து வரும் நிலையில் விஜய் ரசிகர்களும் ‘விஜய் மக்கள் இயக்கம் வெப்சைட்’ மூலம் உறுப்பினர்களை சேர்ப்பதில் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். மாவட்டம் தோறும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில் தனிகவனம் செலுத்தி வருகிறார்கள்.



இதுகுறித்து விஜய் ரசிகர்மன்ற நிர்வாகிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

விஜய் நேர்மையானவர். அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது நடக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். அரசியலுக்கு வருவது குறித்து அவர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இது உடனே நடக்கும் என்று சொல்ல முடியாது. என்றாலும், நாங்கள் தயாராகி வருகிறோம்.

விஜய் தற்போது, அவருடைய 62-வது படத்தில் நடித்து வருகிறார். அது தொடர்பான வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கிறார். எனவே, அரசியல் குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

என்றாலும், அவருக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது. நிச்சயம் அவர் அரசியலுக்கு வருவார் என்று நம்புகிறோம். எனவே, இப்போது விஜய் மக்கள் இயக்கத்துக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News