சினிமா

படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த இயக்குநர் மகேந்திரன்

Published On 2018-01-22 02:18 GMT   |   Update On 2018-01-22 02:18 GMT
புதுக்கோட்டையில் நடந்த படப்பிடிப்பின் போது இயக்குனர் மகேந்திரன் மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.
`புகழேந்தி என்னும் நான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 

அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு தந்தையாக இயக்குனர் மகேந்திரன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது திடீரென இயக்குனர் மகேந்திரன் மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் மகேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறுகையில், இயக்குனர் மகேந்திரன் மூச்சுத்திணறல் மற்றும் அதிகமான ரத்த அழுத்த சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு இதயத்திலும் பிரச்சினை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.



சிகிச்சைக்கு பின்னர் இயக்குநர் மகேந்திரனை சந்தித்த படத்தின் இயக்குநர் கரு.பழனியப்பன் அவரது டுவிட்டர் பக்கத்திர் அவர் நலமுடன் இருப்பதாக கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 

"40 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவின் மூச்சுத்திணறலை சீரடைய வைத்த இயக்குநர் மகேந்திரன் அவர்களுக்கு இன்று ஏற்பட்ட மூச்சுத் திணறல் சீரடைந்து நலமுடன் உள்ளார் ! சந்திக்க சென்ற என்னிடம் "நாளைக்கு ஷுட்டிங் வைங்க, வந்திடுறேன்" என்று சொல்லிச் சிரித்தார் ! வாழ்க நீ எம்மான்!"

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News