சினிமா

நடிகர் ஜெய் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் சரமாரியான குற்றச்சாட்டுக்களை வைத்த பலூன் படக்குழு

Published On 2018-01-05 05:27 GMT   |   Update On 2018-01-05 05:27 GMT
நடிகர் ஜெய்யால் பலூன் படத்தை எடுக்கமுடியாமல் தவித்ததாகவும், மது அருந்துவிட்டு படப்பிடிப்புக்கு வருவது என தயாரிப்பாளர் சங்கத்தில் பல குற்றச்சாட்டுக்களை பலூன் படக்குழு வைத்திருக்கிறது.
ஜெய், அஞ்சலி, ஜனனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பலூன்'. சினிஷ் இயக்கிய இந்த படம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் நிலையில், இயக்குனர் சினிஷ் சமீபத்தில் நான் மகிழ்ச்சியாக இல்லை என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அதற்கு காரணமானவர் அவராகவே நேரில் வந்து அதற்கான நஷ்டத் தொகையை வழங்க வேண்டும். இல்லையேல் உரிய சாட்சியுடன் புகார் அளிப்போம் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.  

இந்நிலையில், படத்தை தயாரித்த 70 எம்.எம். என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் ஜெய் மீது புகார் மனு அளித்திருக்கிறது. அதில் நடிகர் ஜெய் சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை என்றும், அவரால் ரூ.1.50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் முக்கியமாக கூறியிருப்பதாவது, 



* பலூன் படத்தை 2017 ஜனவரி மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ஆனால் 9 மாதங்கள் கழித்து டிசம்பர் 29-ஆம் தேதி தான் வெளியிட முடிந்தது. அதற்கு முக்கிய காரணம் நடிகர் ஜெய் தான். 

* 2016, ஜுன் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே ஜெய் தேதிகளை சரிவர கொடுக்கவில்லை. படபிடிப்புக்கு சரியாக வராமலும், எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமலும் இருந்ததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

* பின்னர் செப்டம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ஆனால் டப்பிங்குக்கு கூட வராமல் மனஉளைச்சலை அளித்தார்.

* உழைப்பு, தொழில் மேல் அக்கறை, மரியாதை, ஒழுக்கம், கொடுத்த வாக்கை கடைப்பிடிப்பது போன்ற அனைத்திற்கும் எதிரானவர் ஜெய். 

* அவரது தொடர் டார்ச்சரால் இயக்குநர் சினிஷ் கொடைக்கானலில் தற்கொலை முயற்சி செய்ய தூண்டும் மனநிலைக்கு தள்ளப்பட்டார்.



* கொடைக்கானலில் 20 நாட்கள் சூட் செய்வதற்காக செட் போட்டு ஜெய் வருவார் என காத்திருந்தோம். ஆனால் அவரை போனிலோ, நேரிலோ எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் செப்டம்பரில் படப்பிடிப்புக்கு வந்தார். அக்டோபர் 5-ல் அஞ்சலிக்கு வலிப்பு வந்ததாகவும், அவரது உயிருக்கே ஆபத்து என்றும் கூறிவிட்டு வெளியேறினார். அஞ்சலியிடம் இதுகுறித்து கேட்ட போது அதனை மறுத்தார். 

* படப்பிடிப்பின் போது தினமும் குடித்துவிட்டு தான் சூட்டிங்குக்கு வருவார். வந்ததும், எப்போ பேக்கப் ஆகும், எப்போது ஹோட்டலுக்கு போய் மீண்டும் குடிக்கலாம் என்ற எண்ணத்திலேயே இருந்து நடிப்பில் கவனம் செலுத்தாமல் மெத்தனப் போக்குடன் இருப்பார். 

* ஒவ்வொரு முறையும் கேரவனில் இருந்து வெளியே வர 1 மணி நேரம் ஆகும். 8 மணி நேரம் சூட் செய்ய திட்டமிட்டால் 4 மணிநேரம் சூட்டிங் செய்வதே முடியாத காரணமாகிவிடும்.

* அவரது இந்த தவறான நடவடிக்கையை நாங்கள் சுட்டிக் காட்டினோம். அதில் கோபமடைந்து அவர் படப்பிடிப்பில் இருந்து வெளியேறினார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. 



* இறுதியில் நாங்கள் வாங்கிய கடன், அதற்கான வட்டி என மொத்தமாக ரூ.1.50 அதிகமாகவே இவரால் செலவானது. 

* எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஜெய் தான் காரணம். அதற்கான ஆதரங்கள் இருக்கிறது. இது எங்களுடன் பணிபுரிந்த அனைவருக்கும் தெரியும். 

* நஷ்ட தொகையான ரூ.1.50 கோடியை ஜெய் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 

Tags:    

Similar News