சினிமா

1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு

Published On 2017-11-21 10:35 GMT   |   Update On 2017-11-21 10:35 GMT
1980-களில் கொடிகட்டிப் பறந்த தென்னிந்திய திரையுலக பிரபலங்கள், மகாபலிபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் சந்தித்து கொண்டாடி இருக்கிறார்கள்.
1980-களில் கொடிகட்டிப் பறந்த தென்னக திரையுலக பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி கொண்டாடி வருகின்றனர்.

தொடர்ந்து 8-வது ஆண்டாக இந்த ஆண்டும் ஒன்று கூடியுள்ளனர். இந்த ஆண்டு மகாபலிபுரத்தில் கடற்கரையில் உள்ள ஒரு விடுதியில் இந்த சந்திப்பு நடந்தது.

அனைவரும் ஊதா நிற உடையணிந்து கடந்த 17-ம்தேதி காலை வந்தனர். அந்த இடம் முழுவதும் ஊதா நிற பூக்கள் உள்ளிட்ட கலை பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இவர்களது கொண்டாட்டங்கள் இரண்டு நாட்கள் நடந்தது.

அங்குள்ள கூடத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களை நடிகை சுஹாசினி, நடிகை லிசி, நடிகர் ராஜ்குமார் சேதுபதி, நடிகை பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு ஆகியோர் உபசரித்தனர். அதன் பின்னர் மும்பை, கேரளா, பெங்களூரு, ஐதராபாத்தை சேர்ந்த திரையுலக பிரபலங்களும் வந்தனர்.

அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 28 பிரபலங்கள் ஊதா வண்ண உடையுடன் கலந்து கொண்டனர். 1960 மற்றும் 70-களில் வெளிவந்து பிரபலமான இந்தி மெல்லிசைப் பாடல்களை நடிகர்கள் ரேவதி, குஷ்பு, சுரேஷ், ரம்யா, சுமலதா, நரேஷ், ராதிகா, சரத்குமார் ஆகியோர் பாடி மகிழ்ந்தனர். இதில் ரேவதி, குஷ்பு ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ராம்ப் வாக் நடைபெற்றது. அதில் சிரஞ்சீவி தலைமையிலான ஆண்கள் அணி வெற்றி பெற்றது. பாடகர் ஸ்ரீராம், பாலிவுட் புகழ் பூணம், ஜாக்கி ‌ஷராப், பாக்யராஜ், வெங்கடேஷ், சுரேஷ் ஆகியோர் படங்களில் இடம்பெற்ற பாடல்களை பாடினர்.

இரண்டாவது நாளாகத் தொடர்ந்த இந்த சந்திப்பில் ஆன்மீகம் உள்ளிட்ட சில தலைப்புகளை விவாதித்தனர்.

நிகழ்ச்சியில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், சரத்குமார், ஜாக்கி‌ஷராப், பாக்யராஜ், ராஜ்குமார், அர்ஜுன், நரேஷ், பானுசந்தர், சுமன், சுரேஷ், ரகுமான், சுஹாசினி, குஷ்பு, ராதிகா, அம்பிகா, ராதா, ஜெய்சுதா, பூனம், பூர்ணிமா, ரம்யாகிருஷ்ணன், பார்வதி ஜெயராம், சுமலதா, லிசி, ரேவதி, மினாகா, ஷோபனா, நதியா ஆகியோர் பங்கு பெற்றனர். 19-ந்தேதி நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
Tags:    

Similar News