சினிமா

‘துப்பறிவாளன்’ படம் இணையதளத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி

Published On 2017-09-15 06:57 GMT   |   Update On 2017-09-15 06:57 GMT
கடும் பாதுகாப்பையும் மீறி விஷால் நடிப்பில் வெளியான ‘துப்பறிவாளன்’ படம் இணையதளத்தில் வெளியாகியதால் படக்குழு அதிருப்தி அடைந்துள்ளது.
‘புதிய திரைப்படங்கள் இணையதளங்களில் வெளியாவதை தடுக்கவும், திருட்டு வி.சி.டி.யை ஒழிக்கவும் தீவிர நடவடிக்கை எடுப்பேன்’ என்று நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் அறிவித்தார்.

இதையடுத்து புதிய திரைப்படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்க வேண்டும் என்று போலீசாரிடம் புகார் கொடுத்தார். திருட்டு வி.சி.டி. பற்றிய புகார்களை விஷால் ரசிகர்கள் கொடுத்தனர். கேபிள் டி.வி.க்களில் புதிய படங்கள் ஒளிபரப்பாவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்றாலும் எதிர்பார்த்த அளவு பலன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் விஷால் நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ படம் நேற்று ரிலீஸ் ஆனது. இந்த படத்தை செல்போனில் படம் பிடித்து வெளியிடுவதை தடுக்க விஷால் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்யப்பட்டது.



தமிழ்நாட்டில் திரையிடப்படும் அனைத்து தியேட்டர்களிலும் இதை கண்காணிக்க விஷால் நற்ணி மன்றம் சார்பில் பறக்கும் கண்காணிப்பு படை அமைக்கப்பட்டது. இவர்கள் தலா 5 பேர் கொண்ட குழுக்களாக செயல்பட்டனர்.

இணையதளத்தில் ‘துப்பறிவாளன்’ படம் வெளியாவதை தடுக்க புதிய படங்களை வெளியிடும் இணைய தளங்களை முடக்க முயற்சி நடந்தது. இதன் ஒரு நடவடிக்கையாக ‘தமிழ் கன்’ என்ற இணையதளத்தின் பொறுப்பாளர் என்று கூறப்பட்ட கவுரிசங்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விஷால் தலைமையிலான தனிக்குழு இவர் பற்றிய தகவலை போலீசுக்கு தெரிவித்தது என்று கூறப்பட்டது. இதற்கு அந்த இணையதளம் மறுப்பு தெரிவித்தது.



இந்த நிலையில் விஷாலின் முயற்சிக்கு சவால் விடும் வகையில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்தில் நேற்றைய தினம் ‘துப்பறிவாளன்’ படம் வெளியானது. பின்னர் ‘தமிழ்கன்’ இணைய தளத்திலும் படம் வெளியிடப்பட்டது. இதனால், விஷாலும், அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரசிகர்களின் கண்காணிப்பையும், விஷாலின் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி ‘துப்பறிவாளன்’ படம், திருட்டுத்தனமாக வெளியாகி இருக்கிறது. இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விஷால் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

Tags:    

Similar News