சினிமா

நடிகர் ‘அல்வா’ வாசு உடலுக்கு மதுரையில் ரசிகர்கள் அஞ்சலி

Published On 2017-08-18 07:55 GMT   |   Update On 2017-08-18 07:55 GMT
கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நடிகர் ‘அல்வா’ வாசு உடலுக்கு மதுரையில் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் ‘அல்வா’ வாசு மதுரையில் மரணம் அடைந்தார்.

மதுரை முனிச்சாலை ருக்மணிபாளையத்தைச் சேர்ந்தவர் நடிகர் வாசு (வயது 54). மறைந்த சினிமா டைரக்டர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.

சத்யராஜ் நடித்த “அமைதிப்படை” படத்தில் நடித்த கதாபாத்திரத்தால் ‘அல்வா’ வாசு என்று அழைக்கப்பட்டார். வடிவேலு உள்ளிட்ட நடிகர்களுடன் 900 படங்களுக்கும் மேலாக நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு ‘அல்வா’ வாசுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் தொடர் சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மி‌ஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நாளடைவில் ‘அல்வா’ வாசுவின் உடல்நிலை கவலைக்கிடமானது. அவரை நேற்று முன்தினம் குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் அவர் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

தகவல் அறிந்து வந்த ரசிகர்கள் ‘அல்வா’ வாசு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.

மரணம் அடைந்த ‘அல்வா’ வாசுவுக்கு அமுதா என்ற மனைவியும், 7-ம் வகுப்பு படிக்கும் கிருஷ்ண ஜெயந்திகா என்ற மகளும் உள்ளனர்.
Tags:    

Similar News