சினிமா

‘பெப்சி’ பிரச்சினையில் ரஜினி, கமல் சமரசம் செய்ய வேண்டும்: ஆர்.கே.செல்வமணி

Published On 2017-08-02 04:48 GMT   |   Update On 2017-08-02 04:48 GMT
பட அதிபர்கள், பெப்சி தொழிலாளர்கள் பிரச்சினையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தலையிட்டு சமரசம் செய்ய வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

‘பெப்சி’ தொழிலாளர்களுடன் பணியாற்றுவது இல்லை என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்து உள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன. தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டு உள்ளது. படப்பிடிப்புகளுக்கு தடங்கல் ஏற்படுவதற்கு பெப்சி காரணம் இல்லை. 40 வருடங்கள் ஒப்பந்தம் போட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுடன் சேர்ந்து பணியாற்ற மாட்டோம் என்று சொல்வது நியாயம் அல்ல.

தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறோம். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முந்தையை நிர்வாகம் நிர்ணயித்த சம்பளத்தை இப்போது குறைக்க சொல்வது சரியல்ல. பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் 40 சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளது. ரஜினிகாந்தின் காலா படப்பிடிப்பும் நடக்கவில்லை.



படப்பிடிப்புகள் நின்று போனதால் சில இயக்குனர்கள் என்னிடம் வருத்தப்பட்டார்கள். தயாரிப்பாளர்களும் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெலிவிஷன் தொடர்கள் விளம்பர படங்களில் பணியாற்ற எங்களுக்கு தடை விதிக்கப்படாததால் அவர்களுடன் பணியாற்றுகிறோம். வேலை நிறுத்தத்தால் தயாரிப்பாளர்கள் பெப்சி தொழிலாளர்கள் ஆகிய இருதரப்புக்குமே பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் இந்த பிரச்சினையில் தலையிட்டு சமரசம் செய்ய வேண்டும். கமல்ஹாசனுடன் ஏற்கனவே இதுகுறித்து பேசி இருக்கிறேன். அவர் சில ஆலோசனைகளை கூறி இருக்கிறார். அரசிடமும் முறையிட இருக்கிறோம்.

23 ஆயிரம் தொழிலாளர்களை ஒதுக்கிவிட்டு தரமான படங்களை பட அதிபர்களால் தயாரிக்க முடியாது. பட தயாரிப்பு தளவாடங்கள் அனைத்தும் பெப்சி தொழிலாளர்களிடம்தான் இருக்கிறது. எனவே தயாரிப்பாளர்கள் எங்களை வேலைக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும். எங்களுடையை 3 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு காண பட அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்”.

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.
Tags:    

Similar News