சினிமா

நடிகர் சங்க கட்டிடம் கட்ட விதிக்கப்பட்ட தடை நீக்கம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On 2017-07-25 10:07 GMT   |   Update On 2017-07-25 10:47 GMT
நடிகர் சங்க கட்டிடம் கட்ட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தியாகராய நகர், அபிபுல்லா சாலையில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, அபிபுல்லா சாலையையும், பிரகாசம் சாலையையும் இணைக்கும் 33 அடி அகலம் கொண்ட பொது சாலையை நடிகர் சங்கத்தினர் மறித்துள்ளனர்.

இதனால், பொதுமக்கள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் குடியிருப்பவர்கள், பிரகாசம் சாலைக்கு வருவதற்கு வேறு பாதைகளை பயன்படுத்தி சுற்றி வரவேண்டியதுள்ளது. விதிமுறைகளை மீறி, சாலைகளை மறித்து கட்டிடம் கட்டப்படுவதால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்த பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கன், ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 



இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நடிகர் சங்க கட்டிடம் கட்ட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நடத்தப்பட்ட விசாரணையில், நடிகர் சங்க கட்டிடம் கட்ட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கிய நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்துள்ளது.
Tags:    

Similar News