சினிமா

திரையரங்குகளில் ரசிகர்கள் மீதான கட்டண சுமையை குறைக்க வேண்டும்: விஷால்

Published On 2017-07-10 06:20 GMT   |   Update On 2017-07-10 06:20 GMT
திரையரங்குகளில் ரசிகர்கள் மீதான கட்டண சுமையை குறைக்க வேண்டும் என்று பட விழாவில் நடிகர் விஷால் பேசினார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
‘சகுந்தலாவின் காதலன்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் பி.வி.பிரசாத் கதாநாயகனாக நடித்து டைரக்டு செய்துள்ளார். கதாநாயகியாக பானு நடித்துள்ளார் மற்றும் கருணாஸ், சுமன், பசுபதி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் கலந்துகொண்டு பேசியதாவது:-

நடிகர்களுக்கு தன்னம்பிக்கை முக்கியம். தன்னம்பிக்கை இருப்பவர்கள் தான் சினிமாவில் ஜெயிக்கிறார்கள். இந்த படத்தின் கதாநாயகனுக்கு அது இருக்கிறது. திரைப்பட தொழிலுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்து இருக்கிறது. அத்துடன் தமிழக அரசும் 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்துள்ளது. இதனால் சினிமா துறைக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேளிக்கை வரியை ரத்துசெய்ய வேண்டும் என்று அரசிடம் வற்புறுத்தி உள்ளோம். எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்று சினிமாவை காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.



தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் அதிகம் செலவிட வேண்டி உள்ளது டிக்கெட் கட்டணம் அதோடு ஆன்லைன் புக்கிங் கட்டணம், பார்கிங் கட்டணம், உணவு பண்டங்களுக்கான கட்டணம் என்றெல்லாம் அதிகம் செலவாகிறது.

இந்த கட்டண சுமைகளை குறைத்து சரிசெய்ய வேண்டும். தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வந்து படம் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். இப்படி நான் பேசுவதால் என்னை வில்லனாக நினைத்தாலும் கவலை இல்லை. சினிமாவில் அனைவரும் ஒரே குடும்பம் தான் ஒற்றுமையுடன் செயல்பட்டு சினிமா தொழிலை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு விஷால் பேசினார். விழாவில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, டைரக்டர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் மற்றும் கதிரேசன், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News