சினிமா

என்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள்: டாப்சி வருத்தம்

Published On 2017-05-13 03:41 GMT   |   Update On 2017-05-13 03:41 GMT
என்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள். படங்கள் தோல்வி அடைவதற்கு கதைதான் காரணம் என்று நடிகை டாப்சி கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
நடிகை டாப்சி அளித்த பேட்டி வருமாறு:-

“நான் தமிழ், தெலுங்கு மொழிகளில் நிறைய படங்களில் நடித்து விட்டேன். ஐதராபாத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இரு மொழி படங்களிலும் நடித்து வந்தேன். சொந்தமாக வீடு வாங்கவும் திட்டமிட்டேன். ஆனால் வணிக படங்கள் அமையாததால் நான் நடித்த பல படங்கள் தோல்வி அடைந்து விட்டன.

இதனால் என்னை ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தி ஒதுக்கினார்கள். வருத்தமாக இருந்தது. நடிப்பது மட்டும்தான் எனது வேலை. படம் தோல்வி அடைவதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? நல்ல கதை, திரைக்கதையாக இருந்தால் ஓடும். இல்லாவிட்டால் ஓடாது. கதைக்கும் நடிகையான எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.

ஆனாலும் நஷ்டத்துக்கு என்னை முழு பொறுப்பாக்கி விட்டு அவர்கள் தப்பித்தனர். சம்பளமும் குறைவாகவே தந்தார்கள். இவற்றை மற்றவர்களிடம் சொல்ல முடியாமல் எனக்குள்ளேயே வைத்து மன அழுத்தத்துக்கு உள்ளாகி தவித்தேன். குடும்பத்தினர்தான் ஆறுதலாக இருந்தார்கள்.



அதன்பிறகு இந்திக்கு போனேன். அங்கு எனக்கு நல்ல கதைகள் அமைந்தன. நான் நடித்த தேவி, பிங்க், நாம் சபானா போன்ற படங்கள் நன்றாக ஓடி பெயர் வாங்கி கொடுத்தன. இப்போது இந்தியில் பட வாய்ப்புகள் குவிகிறது. தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் நிறைய படங்கள் வருகின்றன.

இந்த மாற்றத்துக்கு ரசிகர்கள்தான் காரணம். அவர்கள் நிறைய ஹாலிவுட் படங்கள் பார்க்க ஆரம்பித்து விட்டனர். அவர்களால்தான் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் அதிகம் தயாராகின்றன. இது நல்ல வளர்ச்சி. சினிமா துறைக்கு பெண்கள் அதிகமாக வர ஆரம்பித்து இருக்கிறார்கள்.

நான் அவர்களுக்கு சொல்லும் அறிவுரை என்னவென்றால் நீங்கள் யாரையும் சார்ந்து இருக்க கூடாது. அம்மா, அப்பா, அண்ணன்கள் துணைக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. உங்கள் தேவைகளை நீங்களே கவனித்துக்கொள்ள வேண்டும். எந்த பிரச்சினைகளையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்”.

இவ்வாறு டாப்சி கூறினார்.
Tags:    

Similar News