செய்திகள்

மெட்ரோ ரெயில் பயணிகளுக்காக 120 பஸ்கள் விட முடிவு

Published On 2019-06-05 09:32 GMT   |   Update On 2019-06-05 09:32 GMT
மாதவரம்-சோழிங்கநல்லூர் 2-வது கட்ட மெட்ரோ சேவை தொடங்கும் போது 120 மாநகர பஸ்கள் மூலம் இணைப்பை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தினமும் சுமார் 80 ஆயிரம் பயணிகள் பயணம் செய்கின்றனர்.

பயணிகள் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகள் தொடங்குவதற்கான அடிப்படையான வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாதவரம்- சோழிங்கநல்லூர், கோயம்பேடு- கலங்கரை விளக்கம், மாதவரம்- சிப்காட் ஆகிய வழித்தடங்களில் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

2025-ம் ஆண்டு இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

மெட்ரோ ரெயில் பயணிகளை பஸ் நிலையம், மின்சார ரெயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் தேவையான கட்டமைப்புகளை விரிவுப்படுத்த கவனம் செலுத்தப்படுகிறது.

எந்நேரமும் மெட்ரோ ரெயில் பயணிகள் எளிதாக பயணத்தை தொடரும் வகையில் ஷேர் ஆட்டோ, கார் வசதி, சைக்கிள் வசதி மற்றும் மாநகர பஸ் வசதியினை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

2025-ம் ஆண்டு 2-ம் கட்ட மெட்ரோ சேவை தொடங்கும் போது தினமும் 19 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று கணக்கிடப்பட்டள்ளது. மாதவரம்-சோழிங்கநல்லூர் மெட்ரோ சேவை தொடங்கும் போது மற்ற 2 வழித்தடத்தில் கட்டுமான பணி ஆரம்பிக்கப்படும் தற்போது 32 மெட்ரோ ரெயில் நிலையங்களில் 16 நிலையங்களில் மட்டுமே மாநகர ஸ்மால் பஸ் வசதி வழங்கப்படுகிறது. 13 இடங்களில் ஷேர் ஆட்டோ, கார் வசதியினை அளிக்கிறது.

புதிதாக தொடங்கப்பட்ட வண்ணாரப்பேட்டை மற்றும் ஏ.ஜி.டி.எம்.எஸ் மெட்ரோ ரெயில் நிலையங்களில் போக்குவரத்து இணைப்பு வசதி கொடுக்கப்படவில்லை.

அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு பஸ், ஷேர் ஆட்டோ, டாக்சி வசதியினை அதிகப்படுத்தினால் பயணிகள் எண்ணிக்கை 7 லட்சமாக உயரும் என்று எதிர் பார்க்கிறார்கள். மெட்ரோ பயணிகள் எளிதாக இணைப்பு வசதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

2-வது கட்ட மெட்ரோ சேவை தொடங்கும் போது 120 மாநகர பஸ்கள் மூலம் இணைப்பை அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். அதேபோல சைக்கிள்கள் எண்ணிக்கையை 809 ஆக உயர்த்தினால் பயணிகள் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறும்போது, “பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2-வது கட்ட மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும்போது பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து எளிதாக பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வசதியாக இணைப்பு போக்குவரத்து வசதியினை முழுமையாக செய்ய ஆய்வு செய்து வருகிறோம். கடைசி பயணிக்கும் இந்த வசதி கிடைக்கும் வகையில் ஆராய்ந்து வருகிறோம் என்றார்.
Tags:    

Similar News