செய்திகள்

கேரளாவில் நிபா வைரஸ் - ஊட்டி, கோவையில் தீவிர கண்காணிப்பு

Published On 2019-06-05 08:11 GMT   |   Update On 2019-06-05 08:11 GMT
கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக கோவை மற்றும் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கேரள நோயாளிகளை தீவிர பரிசோதனை செய்து வருகிறார்கள்.
கோவை:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்த 29 வயது என்ஜினீயர் மாணவருக்கு நிபா வைரஸ் பாதிப்புள்ளதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி சைலஜா அறிவித்தார்.

நிபா வைரஸ் தாக்கிய வவ்வால் கடித்த பழங்களை மனிதர்கள் சாப்பிட்டால் பரவுகிறது இந்த நோய். இது தவிர நாய், பூனை, ஆடு, பன்றி போன்ற விலங்குகள் மூலமும் பரவுகிறது. அதனைத்தொடர்ந்து மனிதர்களை தாக்கும். இந்த வைரஸ் காய்ச்சல் மனிதர்களை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும்.

நோய் தாக்கி 5 முதல் 14 நாட்களுக்கு பின்னர் தலைவலி, கடுமையான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, குழப்பமான மனநிலை ஏற்பட்டு பின்னர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தும்.

கேரளாவில் கடந்த ஆண்டு தாக்கிய நிபா வைரசால் 18 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியது. கோவை, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் கேரள செல்வதை தவிர்த்தனர்.

இந்த ஆண்டும் கேரளாவில் நிபா வைரஸ் தாக்கியுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் புனேவில் உள்ள தேசிய ஆய்வு மையத்தில் நிபா வைரஸ் பரிசோதனை வசதி உள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக தமிழக பொது சுகாதாரதுறை சார்பில் தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உஷார்படுத்தப்பட்டுள்ளது. கோவை மற்றும் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கேரள நோயாளிகளை தீவிர பரிசோதனை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News