செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அவசர சட்டம் இயற்ற வேண்டும் - தினகரன்

Published On 2019-01-08 10:20 GMT   |   Update On 2019-01-08 10:20 GMT
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று தினகரன் கூறியுள்ளார். #SterlitePlant

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று உச்சநீதி மன்றம் அளித்துள்ள உத்தரவு மிகப்பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. பலவீனமான நடைமுறை கொண்டு ஸ்டெர்லைட்டை மூடியதாலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பழனிசாமி அரசு உரிய ஆதாரங்களை முன்வைக்க தவறிய காரணத்தினாலும், உணர்வு பூர்வமாக செயல்படாமலும், சட்ட ரீதியாக வலுவாக வாதிடாத காரணத்தினாலும் தான் ஸ்டெர்லைட் நிர்வாகம் சொன்னபடி தனது ஆலையை திறந்துவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளில் தொடர் தோல்விகளைத்தான் நாம் சந்தித்து வருகிறோம். முல்லைப் பெரியாறு, மேகதாது, நீட் என்று தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினைகளில் பழனிசாமி அரசு பெரும் தோல்வியையே தமிழகத்திற்கு பெற்றுத்தந்து வருகிறது.

ஸ்டெர்லைட் வி‌ஷயத்தில் துவக்கத்திலிருந்தே இந்த ஆலையை மூடவேண்டும் என்ற எண்ணம் பழனிசாமி அரசுக்கு இருந்ததே இல்லை.

அதனால் தான் “தாமிர உருக்காலைகளே தமிழகத்திற்கு வேண்டாம்“ என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப் பட்டதை செவிமடுக்க மறுத்தது. இனிமேலாவது தாமதிக்காமல் ஒரு கொள்கை முடிவை எடுத்து, அவசியப்பட்டால் அவசரச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SterlitePlant

Tags:    

Similar News