செய்திகள்

அறந்தாங்கி அருகே 30 நாட்களுக்கு பின்னர் வந்த மின்சாரம் பெண் உயிரை பறித்தது

Published On 2018-12-16 15:31 GMT   |   Update On 2018-12-16 15:31 GMT
அறந்தாங்கி அருகே கஜா புயல் தாக்கி 30 நாட்களுக்கு பின்னர் வந்த மின்சாரம் பெண்ணின் உயிரை பறித்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #gajacyclone

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் கிராமப்புறங்களில் தற்போது வரை மின் விநியோகம் சீராகவில்லை.

இதற்கிடையே கஜா புயல் பாதித்து 30 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை முதல் அறந்தாங்கியை அடுத்த மங்களநாடு மேற்கு கிராமத்திற்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது.

இந்த ஊரைச்சேர்ந்தவர் செல்லத்துரை. அதே ஊரில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 38). மீண்டும் மின்சாரம் வந்த மகிழ்ச்சியில் இன்று முதல் டீக்கடையில் வடை உள்ளிட்ட பலகாரங்களை விற்பனை செய்ய தம்பதியினர் தயாராகினர்.

அதிகாலையில் செல்லத்துரை டீக்கடையை திறக்க புறப்பட்டு சென்றார். வீட்டில் இருந்த விஜயா வடை மற்றும் பலகாரங்கள் செய்வதற்காக பருப்பு வகைகளை அரைக்க மிக்சியை இயக்கினார். அப்போது அதில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. அடுத்த விநாடி தூக்கி வீசப்பட்ட விஜயா சம்பவ இடத்திலேயே பலியானார்.

உடனடியாக ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் முதலில் மின் இணைப்பை துண்டித்தனர். விஜயா உடலை பார்த்து கணவர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

கஜா புயல் தாக்கி 30 நாட்களுக்கு பிறகு நேற்று வந்த மின்சாரம் இன்று பெண்ணின் உயிரை பறித்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #gajacyclone

Tags:    

Similar News