செய்திகள்

ஜனவரி மாதம் முதல் வீடு தேடி வரும் மணல் திட்டம் அமல்

Published On 2018-10-28 10:33 GMT   |   Update On 2018-10-28 10:33 GMT
வீடு தேடி மணல் விற்கும் திட்டத்தை ஜனவரி முதல் செயல்படுத்த போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Sand

சென்னை:

தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு அதிகம் உள்ளதால், கலப்பட மணல், திருட்டு மணல் பல பகுதிகளில் விற்கப்படுவதாக புகார்கள் உள்ளன. 30-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டு உள்ளதால் ரூ.1330-க்கு கிடைக்க வேண்டிய ஒரு லாரி மணல் வெளிமார்க்கெட்டில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

இதனால் மலேசியாவில் இருந்து தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகங்களுக்கு மணல் கொண்டு வரப்பட்டு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து மணல் விற்பனை நடை பெற்று வருகிறது.

இதில் தூத்துக்குடியில் உள்ள மணல் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாக வில்லை. இந்த மணலில் சிலிக்கான் கலந்துள்ளதாக வதந்தி பரப்பப்பட்டதால் மற்ற மாவட்டங்களில் இருந்து அங்கு சென்று மணல் வாங்க மக்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

ஆனால் எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள மலேசிய மணலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

56 ஆயிரம் மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் தினமும் 300 லாரி மணல் விற்பனையாகிறது. ஒரு யூனிட் மணல் 10,350 ரூபாய்க்கு எண்ணூரில் கிடைக்கிறது.

இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்களின் சிரமத்தை போக்க வீடு தேடி மணல் விற்கும் திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. அனேகமாக ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களில் தேவையான அளவு மலேசிய மணல் உள்ளதால் மணல் தேவைப்படுபவர்கள் ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தால் 100 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளவர்களுக்கு முதலில் வீடு தேடி சென்று மணல் வழங்குவோம்.

இதற்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மணல் இறக்கு மதியை அதிகரிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறியதாவது:-

எண்ணூர் துறைமுகத்தில் மலேசிய மணல் கிடைப்பதால் தினமும் 300 லாரிகளில் மணல் எடுத்து வருகிறோம். ஆற்று குவாரிகளில் 1 யூனிட் மணல் ரூ.1,330-க்கு நிர்ணயித்துள்ளனர். ஆனால் துறைமுகத்தில் கிடைக்கும் மலேசிய மணல் 1 யூனிட் ரூ.10,350 என விலை நிர்ணயம் செய்துள்ளனர்.

விலை அதிகம் இருந்தாலும் பரவாயில்லை. உடனுக்குடன் மணல் கிடைக்கிறது. ஆன்லைனில் 41,000 லாரிகளுக்கு மணல் கேட்டு பதிவு செய்துள்ளோம்.

திருவள்ளூர், ஆற்காடு, விழுப்புரம், கடலூரில் 30 மணல் குவாரிகள் மூடப் பட்டுள்ளது. இதை அரசு திறந்து மணல் விற்பனை செய்தால் தட்டுப்பாடு முழுமையாக நீங்கும்.

வீடு தேடி மணல் விற்கும் திட்டத்தை ஜனவரி முதல் செயல்படுத்த போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருவது நல்லதுதான். ஆனால் இதை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும், உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது தான் இதுபற்றி தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார். #Sand

Tags:    

Similar News