செய்திகள்

படுதோல்வியால் பீதி அடைய தேவையில்லை: சச்சின் தெண்டுல்கர்

Published On 2019-05-27 10:24 GMT   |   Update On 2019-05-27 10:24 GMT
பயிற்சி ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் பீதி அடைய தேவையில்லை என்று சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. முன்னணி பேட்ஸ்மேன்களின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்தியா 179 ரன்களில் சுருண்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. மேலும், உலகக்கோப்பையை வெல்லுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோற்றதால் பீதி அடைய தேவையில்லை என்று கிரிக்கெட் சகாப்தம் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் இந்திய அணியை நான் மதிப்பீடு செய்யமாட்டேன். இது ஒரு நீண்ட தொடர். இதுபோன்று சம்பவம் கிரிக்கெட்டில் நடைபெறலாம்.

முக்கியமான போட்டிகள் இன்னும் தொடங்கவே இல்லை. இது வெறும் பயிற்சி ஆட்டம்தான். என்ன மாதிரியான ஆடுகளம் என்பதை புரிந்து கொள்வதற்கு பயிற்சி ஆட்டங்கள் பயன்படும். அதற்குள் பீதி அடைய தேவையில்லை.

பெரும்பாலான அணிகள் பயிற்சி ஆட்டத்தில் ஆடும் லெவனை (11 வீரர்களை) முடிவு செய்ய விரும்பாது. பந்து வீச்சையும், பேட்டிங்கையும் மேம்படுத்திக் கொள்ள பயிற்சி ஆட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.



ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி அளிக்கும வகையில் விளையாடும் என்று நான் ஏற்கனவே கூறி இருந்தேன். ஏனென்றால் அந்த அணியின் சுழற்பந்து வீச்சு அபாரமாக உள்ளது. மிடில் ஓவரில் விக்கெட்டை கைப்பற்றக்கூடிய திறமை உள்ளது. அந்த அணி வீரர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெண்டுல்கர் ஏற்கனவே கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News