செய்திகள்

சிறுபான்மையினரை நடத்தும் விதம்- இம்ரான் கானுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் கயிப் பதிலடி

Published On 2018-12-25 10:25 GMT   |   Update On 2018-12-25 10:25 GMT
சிறுபான்மையினரை நடத்தும் விதம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கயிப் பதிலடி கொடுத்துள்ளார். #ImransRemarks #MohammadKaif
புதுடெல்லி:

சிறுபான்மையின மக்களை எப்படி நடத்துவது என்பதை மோடி அரசுக்கு காட்டுவோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் பேசினார். அவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் போன்ற பயங்கரவாத நாடு சிறுபான்மையின மக்களை எப்படி நடத்துவது என்று இந்தியாவுக்கு இப்போது பாடம் நடத்துகிறது என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறினார். பாகிஸ்தானை டெரரிஸ்தான் (பயங்கரவாத நாடு) என பாஜக செய்தித் தொடர்பாளர் ஒருவர் விமர்சித்தார்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கயிப்பும் இம்ரான் கான் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சிறுபான்மையின மக்களை எப்படி நடத்தவேண்டும்? என வேறெந்த நாட்டிற்கும் உபதேசம் செய்யும் தகுதி படைத்த கடைசி நாடு பாகிஸ்தான்.


பாகிஸ்தானை தனியாக பிரித்தபோது அங்கு 20 சதவீத சிறுபான்மையின மக்கள் இருந்தனர். இப்போது 2 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர். அதேசமயம், இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு சிறுபான்மையின மக்கள் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அலகாபாத்தைச் சேர்ந்த கயிப் (வயது 38), இந்தியாவுக்காக 125 ஒருநாள் போட்டிகளிலும், 13 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த ஜூலை மாதம் அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். #ImransRemarks #MohammadKaif
Tags:    

Similar News