செய்திகள்

கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை - கர்நாடக அரசு ஆலோசனை

Published On 2018-11-24 09:40 GMT   |   Update On 2018-11-24 09:40 GMT
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக துணை முதல் மந்திரி பரமேஷ்வரா தெரிவித்துள்ளார். #GParameshwara #Lankeshkilling
பெங்களூரு:

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ்(55). பிரபல பத்திரிகையாளரான இவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கடந்த 5-9-2017 அன்று அவருடைய வீட்டின் அருகே கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

இந்த படுகொலை தொடர்பாக விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கொலை திட்டம் தீட்டிய அமோல் காலே, பிரவீன் (எ) சுஜித் குமார், அமித் டேல்வேக்கர் மற்றும் துப்பாக்கியால் சுட்ட பரசுராம் வாக்மாரே உள்பட 18 பேர்மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக பெங்களூரு பெருநகர முதன்மை நீதிமன்றத்தில் 9,235 பக்கங்களை கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் நேற்று தாக்கல் செய்தனர்.

கவுரி லங்கேஷுடன் எவ்வித அறிமுகமோ, பகையோ இல்லாத ஒரு அமைப்பு அவரை கொல்வதற்கு கடந்த 5 ஆண்டுகளாக திட்டமிட்டிருந்ததாக இந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சனாதன் சன்ஸ்த்தா என்னும் இந்துத்துவ அமைப்பின் துணை அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது சித்தாந்தத்துக்கு எதிரானவர் என்று கருதியதால் கவுரி லங்கேஷை கொல்ல முயன்றதாக அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.பாலன் தெரிவித்தார்.



பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில துணை முதல் மந்திரி பரமேஷ்வரா பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கொலையில் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை விதிக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், விரைவில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். #GParameshwara  #Lankeshkilling
Tags:    

Similar News