செய்திகள்

ஒரத்தநாடு அருகே பெண்ணை தாக்கி மானபங்கம் - 10 பேர் கும்பல் மீது போலீசில் புகார்

Published On 2019-05-21 13:27 GMT   |   Update On 2019-05-21 13:27 GMT
ஒரத்தநாடு அருகே பெண்ணை தாக்கி 10 பேர் கும்பல் மானபங்கம் செய்த சம்பவம் குறித்து அவர்கள் மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் பஞ்சாயத்து, சமயன்குடிக்காடு, ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 39). இவர் வெளியூரில் தங்கி கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவரது மனைவி ஜெயமாலா (35). அந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பிரிவினருக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அதில் ஒரு பிரிவினரை மற்றொரு பிரிவினர் கிராம கட்டுப்பாட்டில் இருந்து விலக்கி வைத்து முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ஒரத்தநாடு தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டமும் நடைபெற்றது என்றும், அதில் ஏதும் முடிவு எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் மற்றொரு பிரிவினர் ஒரு பிரிவினரிலிருந்து ஒரு சாராரை மட்டும் சேர்த்துக்கொண்டும் பலரை சேர்க்காமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவ நாளன்று ஜெயமாலா தனியாக வீட்டில் இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த செல்லையன் மகன்கள் பழனிவேல், ஆறுமுகம், சுமுக்கன் மகன் சொட்டு என்கிற மதியழகன், சிங்காரம் மகன் காசி என்கிற காசிநாதன், வைத்திலிங்கம் மகன் அல்லிமுத்து, ராசு மகன் சேகர், சாமிக்கண்ணு மகன் குமார் மற்றும் மூவர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி வீட்டின் உள்ளே நுழைந்து ஜெயமாலாவை தாக்கி மானபங்கம் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மற்றொரு பிரிவினர் தூண்டியதால்தான் தன்னை தாக்கியதாகவும் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்துள்ளார்.

இப்புகாரின் பேரில் ஒரத்தநாடு ஏட்டு ராஜ்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேற்படி சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஜெயமாலா அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒரத்தநாடு அருகே பெண்ணை 10 பேர் கும்பல் மானபங்கம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News