செய்திகள்

பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் வெளியேற்றம் - கல்லூரி குடியிருப்பில் வசிக்க தடை

Published On 2019-01-19 12:18 GMT   |   Update On 2019-01-19 12:18 GMT
புதுவை அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கல்லூரி குடியிருப்பில் வசிக்க தடை விதிக்கப்பட்டது.
புதுச்சேரி:

புதுவை குரும்பாபேட்டில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.

இவர் அங்குள்ள ஆசிரியர் குடியிருப்பிலேயே வசித்து வந்தார். இதன் அருகே மாணவிகள் விடுதி உள்ளது. அந்த மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

அந்த கல்லூரியில் மும்பையை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். அவர் நடந்து சென்றபோது பேராசிரியர் ஆபாச சைகை செய்தார். இதை ரகசியமாக படம் பிடித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர்.

இதுசம்பந்தமாக டீன் ராம்குமார் மேற்பார்வையில் விசாரணை நடத்து வருகிறது. இதற்கிடையே பேராசிரியரை குடியிருப்பில் இருந்து வெளியேறும்படி நிர்வாகத்தினர் உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் சம்பவம் பற்றி அறிந்து மாணவியின் பெற்றோர் மும்பையில் இருந்து வந்துள்ளனர். அவர்களும் பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டனர்.

தவறு செய்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவரை சஸ்பெண்டு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேற்கொண்டு போலீசில் புகார் கொடுப்பதா? இல்லையா? என்பது பற்றியும் முடிவு எடுக்க உள்ளனர்.

இதுபற்றி டீன் ராம்குமாரிடம் கேட்டபோது, இது சம்பந்தமாக ஸ்ரீகுமார் தலைமையில் கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

இதற்கிடையே மேலும் சில ஆசிரியர்கள் மீதும் மாணவிகள் புகார் கொடுத்திருப்பதாக தெரிகிறது. அதன்மீதும் விசாரணை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews
Tags:    

Similar News