செய்திகள்

பரவை அருகே கிணற்றில் தவறி விழுந்து 2 டிரைவர்கள் பலி

Published On 2018-12-12 05:43 GMT   |   Update On 2018-12-12 05:43 GMT
பரவை அருகே விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய போது கிணற்றில் தவறி விழுந்து 2 டிரைவர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம்:

மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது 39). டிரைவர். இவரது நண்பர் சரவணகுமார் (34). இவர் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

சம்பவத்தன்று ராஜேஸ்வரன் தனது கார் உரிமையாளரை பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்து ஈரோட்டில் விட்டார். பின்னர் தனது நண்பர் சரவணகுமாரை பார்ப்பதற்காக திருப்பூருக்கு வந்தார்.

அங்கு வைத்து நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து மது அருந்தினர். இரவு 10 மணியளவில் காரில் கோவை நோக்கி சென்றனர். கார் கே.என்.புரம் அருகே சென்ற போது கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

பின்னர் 2 பேரும் அரசு பஸ் டிரைவர் மற்றும் பயணிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பயணிகள் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்தால் போதையில் இருப்பது தெரிந்து விடும் என்பதற்காக 2 பேரும் காரை பூட்டி விட்டு சாலை யோரம் இருந்த குட்டைக்காட்டு தோட்டத்துக்கு சென்றனர். பின்னர் அரசு பஸ் புறப்பட்டு சென்றது.

இரவு நேரம் என்பதால் இருளில் வழி தெரியாமல் 2 பேரும் தோட்டத்தில் உள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தனர்.

மறுநாள் காலையில் தோட்டத்திற்கு சென்ற நடராஜன் என்பவர் கிணற்றை தற்செயலாக பார்த்த போது கிணற்றுக்குள் 2 பேரின் உடல் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் இருந்து ராஜேஸ்வரன், சரவணகுமார் ஆகியோரின் உடலை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜேஸ்வரன் ஓட்டி வந்த காரின் முன் பக்கத்தில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டு இருந்தது. எனவே காரின் உரிமையாளர் அ.தி.மு.க.வை சேர்ந்தவராக இருக்கலாம்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News