செய்திகள்

மரப்பாலத்தில் மோடி உருவ பொம்மை எரிப்பு- பஸ் நிலையம் முன்பு மறியல்

Published On 2018-09-10 10:38 GMT   |   Update On 2018-09-10 10:38 GMT
பந்த் போராட்டத்தையொட்டி புதுவையில் பல இடங்களில் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் மறியல் போராட்டம் நடத்தினர். #BharathBandh #PetrolDieselPriceHike

புதுச்சேரி:

பந்த் போராட்டத்தையொட்டி புதுவையில் பல இடங்களில் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் மறியல் போராட்டம் நடந்தது. இடதுசாரி கட்சிகளான இந்தியகம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, கம்யூனிஸ்டு (எம்.எல்) சார்பில் சுப்பையா சிலை சந்திப்பில் இருந்து ஊர்வலம் வந்தது. ஊர்வலத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், அபிஷேகம், சேதுசெல்வம், தினேஷ்பொன்னையா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், முன்னாள் செயலாளர்கள் பெருமாள், முருகன், கம்யூனிஸ்டு (எம்.எல் )மாநில செயலாளர் பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊர்வலம் பஸ் நிலையம் அருகே வந்தது. அங்கு மறியல் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெறக்கோரியும் கோ‌ஷம் எழுப்பினர். புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் தலைமையில் வில்லியனூரில் இருந்து இளைஞர் காங்கிரசார் மோட்டார் சைக்கிளில் கிராமப்பகுதியில் சுற்றிவிட்டு நகர பகுதிக்கு ஊர்வலமாக வந்தனர்.

புதுவை பஸ் நிலையம் அருகே வந்தபோது பஸ் நிலையத்தில் சென்னைக்கு தமிழக அரசு பஸ் புறப்பட தயாராக இருந்தது. இதைக்கண்ட அவர்கள் பஸ்நிலையம் முன்பு அமர்ந்து மறியல் செய்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து நகர பகுதியில் வலம் வந்த அவர்கள் திறந்திருந்த கடைகளை அடைக்கச்செய்தனர். புதுவை பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் வட்டார தலைவர் அப்துல்ரகுமான், மற்றும் மத்திய மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமையில் காங்கிரசார் மறியல் போராட்டம் நடத்தினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

காங்கிரஸ் சார்பில் மரப்பாலம் சந்திப்பில் மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்டவர்கள் மறைத்து வைத்திருந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை ரோட்டில் போட்டு தீ வைத்து எரித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல எஸ்.யூ.சி.ஐ. கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 4 இடத்தில் மறியல் நடந்தது. வெங்கடசுப்பாரெட்டியார் சிலை அருகில் மாநில செயலளார் லெனின்துரை தலைமையிலும், அரியாங்குப்பத்தில் முத்து தலைமையிலும், சிவாஜி சிலை அருகில் பிரளயன் தலைமையிலும், சேதராப்பட்டில் ஏ.ஐ.யூ.டி.யூ.சி. மாநில தலைவர் சிவக்குமார் தலைமையிலும் மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

முத்தியால்பேட்டையில் முன்னாள் காங்கிரஸ் செயலாளர் பி.எம்.சரவணன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் லட்சுமிகாந்தன், வட்டார காங்கிரஸ் தலைவர் செல்வாம்பிகை, முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் கலியபெருமாள் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

நகர பகுதியில் மறியல் செய்து கைது செய்யப்பட்டவர்கள் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள கரிகுடோவுனில் அடைக்கப்பட்டனர். அவர்களை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் சந்தித்தார். #BharathBandh #PetrolDieselPriceHike 

Tags:    

Similar News