லைஃப்ஸ்டைல்

பெண்களே காட்டுத் தீ போன்று கொடூரமானது கோபம்

Published On 2019-02-01 07:41 GMT   |   Update On 2019-02-01 07:41 GMT
கோபப்படுவது முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. நியாயமான விஷயத்திற்கு கோபப்படலாம். ஆனால் சுற்றி இருப்பவர்களை பாதிக்கும் வகையில் அந்த கோபம் அமைந்துவிடக் கூடாது.
பொது இடத்தில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற பக்குவம் சிலருக்கு தெரியாது. ஏதாவதொரு பிரச்சினையை மனதில் போட்டு குழப்பிக்கொண்டிருப்பார்கள். அதற்கு எப்படி முடிவெடுப்பது என்று தெரியாமல் தடுமாறும் மனநிலையில் இருப்பார்கள். அந்த சமயத்தில் மற்றவர்கள் ஜாலியான மனநிலையிலோ, கேலி செய்யும் தொனியிலோ பேசினால் உக்கிரமாகி கோபத்தை வெளிப்படுத்தி மற்றவர்களிடம் கொட்டிவிடுவார்கள்.

அவர்கள் எதற்காக கோபப்படுகிறார்கள் என்பது சம்பந்தப்பட்டவருக்கு புரியாது. இப்படி சம்பந்தமில்லாமல் அடுத்தவர்கள் மீது கோபப்படுவது பலருக்கு பழக்கமாகிவிட்டது. பின்னர் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு சமாதானப்படுத்துவார்கள். ஆயிரம்தான் சமாதானம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் பலரும் இருக்கமாட்டார்கள். அதனால் தேவையில்லாமல் அவர்களுக்கிடையே மனஸ்தாபம் உருவாகி விரிசல் ஏற்பட்டுவிடும்.

கோபம் என்பது வாழ்க்கையில் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும். தான் பேசுவதை நியாயப்படுத்தியே காட்டும். வேண்டாத கடும் வார்த்தைகளை வெளிக்கொண்டுவரும். நம்மைப் பற்றிய தவறான அபிப்ராயத்தை மற்றவர்களிடம் விதைத்துவிடும். கோபம் எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்றுதான். அதேவேளையில் அது விவேகமானதாக இருக்க வேண்டும். எந்த இடத்தில் எப்போது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. நம் கோபத்தை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் அதை நியாயமான முறையில் வெளிப்படுத்த வேண்டும்.

நம்முடைய கோபம் சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிய வேண்டும். அதில் உண்மைத்தன்மையும் இருக்க வேண்டும். அப்போது தான் நமக்கு நியாயம் கிடைக்கும். நாம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதற்கு வலு சேர்க்கும் விதமாக நம்முடைய ஆதங்கம் வெளிப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்களை ஆத்திரப்படவைக்கும் விதத்தில் நடந்துகொள்ளக்கூடாது. அதனால் எந்த பிரயோஜனமுமில்லை.

நம்முடைய எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால் கோபம் வரலாம். அது நமக்கு நியாயமானதாகவும் தெரியலாம். அதேவேளையில் மற்றவர்களின் சூழ்நிலையையும் புரிந்துகொள்ள வேண்டும். வெறும் கோபம் மட்டும் நியாயத்தை பெற்றுத் தந்துவிடாது. காட்டுத் தீ போன்று கொடூரமானது கோபம். அதிலும் பொது இடத்தில் பலர் முன் கோபப்படும்போது நம்முடைய பொறுமையற்ற குணத்தை அது பிரதிபலிக்கும்.

நம்மை பற்றிய தவறான அபிப்பிராயங்களை அவர்களிடம் உண்டாக்கிவிடும். ‘பொறுப்பற்றவர்கள் தான் இப்படி பொது இடத்தில் கோபப்படுவார்கள். தங்கள் இயலாமையை வெளிப்படுத்த இப்படி நடந்து கொள்வார்கள்’ என்று கோபப்படுபவர்களை கடுமையாக சாடுவார்கள். சிலர் எப்போது ‘நாலு பேர் கூடுவார்கள். நம் கோபத்தை காட்டலாம்’ என்று காத்திருப்பார்கள். தாம் கோபப்படுவதை பார்த்து மற்றவர்கள் பயப்பட வேண்டும், தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது எதுவும் நடக்காது.

கோபப்படுவது முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. நியாயமான விஷயத்திற்கு கோபப்படலாம். ஆனால் சுற்றி இருப்பவர்களை பாதிக்கும் வகையில் அந்த கோபம் அமைந்துவிடக் கூடாது. கோபம் என்பது மனிதர்களுக்கு தேவையான ஒன்று தான். அதை எப்படி எங்கே எந்த அளவு வெளிப்படுத்த வேண்டும் என்ற விதி இருக்கிறது. நாம் யாரிடம் கோபத்தை காண்பிக்கிறோம், எதற்காக கோபப்படுகிறோம் என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Tags:    

Similar News