ஆன்மிகம்
கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம். (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் கெங்கையம்மன்).

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2019-05-15 05:59 GMT   |   Update On 2019-05-15 05:59 GMT
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் திருவிழா கடந்த 30-ந்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 11-ந் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நேற்று கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி கோவிலில் கெங்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அதைத்தொடர்ந்து உற்சவர் கெங்கையம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டது.

பின்னர் தேர் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவிலில் இருந்து தரணம்பேட்டை, நடுப்பேட்டை வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

வழிநெடுகிலும் பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றுடன் நாணயங்கள் கலந்து தேர் மீது இறைத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபட்டனர். மேலும் ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

விழாவில் தாசில்தார்கள் டி.பி.சாந்தி, ரமாநந்தினி, நகராட்சி பொறியாளர் ஜி.உமாமகேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கே.எம்.ஜி. கல்லூரி செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், கம்பன் கழக தலைவர் ஜெ.கே.என்.பழனி, அரசு வக்கீல் கே.எம்.பூபதி, குடியாத்தம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.மூர்த்தி, முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் ஏ.எல்.எஸ்.முருகன், திருமகள்விஜயகுமார், பி.மோகன், எம்.என்.பாஸ்கரன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி பல இடங்களில் பக்தர்கள் அன்னதானம், கூழ், மோர் வழங்கினர்.

இன்று (புதன்கிழமை) கெங்கையம்மன் சிரசு பெருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி அம்மன் சிரசு ஊர்வலம், கண் திறப்பு, வாணவேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
Tags:    

Similar News