ஆன்மிகம்
உப்பிலியபுரம் அருகே பூஞ்சோலை அம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடந்த போது எடுத்த படம்.

பூஞ்சோலை அம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்

Published On 2018-12-03 04:36 GMT   |   Update On 2018-12-03 04:36 GMT
உப்பிலியபுரம் அருகே பூஞ்சோலை அம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்..
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே சோபனபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூஞ்சோலை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு தேர்களின் அச்சு மற்றும் சக்கரங்கள் பழுது அடைந்து இருந்தது. மரத்தாலான அந்த சக்கரங்களை அகற்றிவிட்டு புதிய இரும்பு சக்கரங்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி இக்கோவிலுக்கு ரூ.3¾ லட்சம் செலவில் புதிய இரும்பிலான சக்கரங்கள் மற்றும் அச்சுகளை பொருத்தினர். இதனையடுத்து தேர் வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த தேர் வெள்ளோட்டத்தை அமைதியாக நடத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது.

முன்னதாக மாரியம்மன் கோவில் திடலில் நிறுத்தப்பட்டிருந்த புதிய இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட இரண்டு தேர்களில் பல வர்ணங்கள் பூசப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. காலை 7 மணிக்கு ஆலயத்தில் புண்ணியதானம் மற்றும் கும்பம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர் காரியஸ்தர்கள் கிராம வழக்கப்படி ஆசாரி களுக்கு முதல் மரியாதை கொடுத்து மேளதாளத்துடன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். அதன்பின் தேர்களுக்கு சன்னக்கட்டை போட்டு தேரோட்டம் நடத்தும் தொழிலாளர்களை அழைத்து வந்தனர். பிறகு, கிடா வெட்டி காவு கொடுத்து வானவேடிக்கை மேளதாளத்துடன் முதல் பூஜையை காஞ்சேரிமலை, குருவம்பட்டி புதூர் கிராம மக்கள் தேங்காய் உடைத்து நடத்தினார்கள்.

ஆண்கள் ஒரு தேரையும், பெண்கள் ஒரு தேரையும் இழுக்க தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. தேரிலிருந்து நவதானியங்களை அள்ளித் தெளித்த வண்ணம் தேர்வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்த தானியங்களை துணியில் முடிந்து புதுவீடு கட்டும் நிலக்கதவில் வைத்தால், குடும்பத்தில் நல்லது நடக்கும். வயலில் விதைக்கும் விதைகளுடன் கலந்து தெளித்தால் மகசூல் அதிகமாகும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. தேர் வெள்ளோட்டமானது தேரோடும் வீதிகளில் வலம் வந்து மீண்டும் மாரியம்மன் கோவில் திடலை வந்தடைந்தது. நிகழ்ச்சியில் கிராம முக்கியஸ்தர்கள், அறங்காவலர் துறை அதிகாரி நித்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேர் வெள்ளோட்டத்தினை முன்னிட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
Tags:    

Similar News