ஆன்மிகம்

இயேசு சொன்ன உவமைகள்: வழி தவறிய ஆடு

Published On 2018-12-13 04:32 GMT   |   Update On 2018-12-13 04:32 GMT
நமது வாழ்க்கையில் நாம் தவறிய ஆட்டைப் போல இருக்கிறோம் என்பது இதயத்தால் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்பதை வைத்தே கணக்கிடப்படும்.
லூக்கா 15 : 4..7

(புதிய மொழிபெயர்ப்பு )

“உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?

கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்பார்.

அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

( பழைய மொழிபெயர்ப்பு )

உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?

கண்டு பிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு,வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?

அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

( இதே உவமை மத் 18:12 ‍ 14 பகுதியிலும் உண்டு )
இயேசு வழக்கம் போலவே மக்களுக்குப் புரியக் கூடிய விஷயங்கள் மூலமாக, மக்களுக்குத் தெரிந்திராத இறை அன்பைக் குறித்துப் பேசுகிறார்.

ஒருவரையும் சிறியவராய் எண்ணக் கூடாது, இறைவனின் பார்வையில் எல்லோரும் மதிப்பு மிக்கவர்கள். எந்த ஒரு மனிதனும் தனது மீட்பை இழந்து விடக் கூடாது என்பதே இறைவனின் விருப்பம். என்பதே இந்த உவமையில் இழையோடும் சிந்தனையாகும்.

இந்த உவமையில் இயேசுவே மேய்ப்பனாக இருக்கிறார். அவரிடம் நூறு ஆடுகள் இருக்கின்றன. அவரிடம் இருக்கும் ஆடுகள், அவரை நம்பி அவரை மீட்பராக ஏற்றுக் கொண்ட மக்களைக் குறிக்கிறது. இயேசுவை விட்டு விலகி பாவத்தின் வழியில் நடப்பவர் தான் வழி விலகிப் போன ஆடு.

விலகிச் சென்றது ஒற்றை ஆடுதானே என நினைக்காமல், மற்ற ஆடுகள் போதும் என அமைதிகாக்காமல், அந்த ஒற்றை ஆட்டைத் தேடிச் செல்கிறார் மேய்ப்பன். இங்கே இயேசுவின் அன்பு வெளிப்படுகிறது.

வரி தண்டுவோரையும், ஏழைகளையும், நோயாளிகளையும் பாவிகள் என உதறி நடந்தது யூத சமூகம். அவர்களுக்கு மீட்பு இல்லை என அறிவித்துத் திரிந்தது. அந்த சூழலில் இயேசுவின் இந்த போதனை ஏழைகளுக்கு புத்துணர்ச்சியை ஊட்டியது.

விண்ணக மாட்சியை விட்டு, மண்ணுலகில் மனிதனாய் வந்து, சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டு, நம் பாவத்தையெல்லாம் சுமந்து தீர்த்த இறைவன் அவர். “என் வேலை முடிஞ்சது, இனி வேணும்ன்னா நீயா மீட்பின் வழிக்கு வா” என விடவில்லை. விலகிச் செல்கைடுல் மீண்டும் அவர் தேடி வருகிறார். அதில் அவருடைய அளவில்லா அன்பும் கரிசனையும் தெரிகிறது.

ஆட்டுக்கு ஒரு இயல்பு உண்டு. அது சும்மா வழிதவறி விடாது. அருகில் ஏதேனும் புல்லைப் பார்த்தால் அந்தப் பக்கம் தாவும், அங்கிருந்து இன்னொரு அழகிய புல் கூட்டத்தைப் பார்த்தால் அங்கே போகும், இப்படியே சென்று கொண்டிருக்கும் ஆடு, தாமதமாகத் தான் புரிந்து கொள்ளும் தான் வழி விலகிவிட்டோம் எனும் உண்மையை !

ஊரில் ஆட்டுக்குட்டியைக் காணோமெனில் சொல்வார்கள், “பக்கத்து மரச்சீனித் தோட்டத்துல பாரு, இல்லேன்னா சானல் கரைல புல் கூட்டத்துல போய் பாரு” என்று. ஆடு புல்லைத் தேடியோ இலையைத் தேடியோ தான் செல்லும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

உலக செல்வத்தையும், உடனடிச் சிற்றின்பங்களையும் நாடித் தேடி ஓடும் மக்கள் இப்படித் தான் வழி விலகுகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு படி, இன்னொரு படி என தாவித் தாவி அவர்கள் உலக சிற்றின்பங்களில் சிக்கிக் கொள்கின்றனர். கடைசியில் மந்தையை விட்டு வெகு தூரத்தில் சென்று விடுகின்றனர்.

ஒரு சின்ன கோணப் பிழை கப்பலை பல மைல் தூரம் வழிவிலகச் செய்து விடும். முதலில் சிறிதாக இருக்கும் இடைவெளி போகப் போகப் பெரிதாகிவிடும். கடைசியில் எங்கே நிற்கிறோம் என்பதே புரியாமல் வெலவெலக்கும் சூழல் உருவாகும்.

ஆடு, நாயைப் போல மோப்பம் பிடிக்காது. வழி விலகிவிட்டால் பதறிப்போகும். மே..மே எனும் அபயக் குரல் மூலம் யாரையேனும் தொடர்பு கொள்ள முயலும். அந்தக் குரல் கொடிய விலங்குகளை அடைந்தால் மரணம் சர்வ நிச்சயம். மந்தையிலுள்ள ஒரு ஆட்டுடன் தொடர்பு கொள்ள முடிந்தால் தப்பிவிடலாம்.

ஆடுகளின் தொடர்பு அப்படித் தான் இருக்கும். எங்கிருந்தோ குரல் கொடுக்கும் குட்டி ஆட்டின் குரலுக்கு அன்னையின் குரல் மறு முனையிலிருந்து வழிகாட்டும். அது தான் அந்த ஆட்டை மீண்டும் மந்தையில் சேர்க்கும். அல்லது மேய்ப்பனின் குரல் கேட்க வேண்டும்.

இங்கே ஆடு, தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டது. அதைத் தேடி வருகிறார் மேய்ப்பன். ஆட்டைக் கண்டு பிடிக்கிறார்.

ஆட்டைக் கண்டுபிடிக்கும் மேய்ப்பன் அடையும் மகிழ்ச்சி நமக்கு இறையன்பின் ஆழத்தைப் புரிய வைக்கிறது. ஒரு சின்ன பழிச் சொல் இல்லை, ஒரு சின்ன திட்டு இல்லை, அடி இல்லை, விசாரணை இல்லை. அள்ளி எடுத்து தோளில் போடுகிறார். நடக்கிறார்.

ஒரு ஆடு எத்தனை கிலோ இருக்கும் என்பதெல்லாம் மேய்ப்பனுக்குக் கவலையில்லை. தனது குழந்தை எவ்வளவு எடையாய் இருந்தாலும் தூக்கிச் சுமக்கும் அன்னையைப் போல அவர் சுமக்கிறார். அவர் அடைகின்ற மகிழ்ச்சி அளவிட முடியாததாய் இருக்கிறது.

ஆட்டைச் சுமந்து வரும் மேய்ப்பன் நேரடியாக வீட்டுக்குச் சென்று அண்டை வீட்டாரையெல்லாம் அழைத்து விருந்து வைத்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார். வழிவிலகிச் செல்லும் ஒரு மனிதர் மீண்டும் இறைவனிடம் வரும்போது விண்ணகம் சிலிர்க்கிறது, மகிழ்கிறது. கொண்டாடுகிறது.

99 ஆடுகளையும் மேய்ப்பன் உதாசீனம் செய்யவில்லை, அவர்களை மந்தையாய் ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு ஆட்டைத் தேடிச் செல்கிறார்.

நமது வாழ்க்கையில் நாம் தவறிய ஆட்டைப் போல இருக்கிறோம் என்பது இதயத்தால் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்பதை வைத்தே கணக்கிடப்படும். நூறு பேர் இருக்கின்ற ஒரு திருச்சபையில், ஒருவர் மட்டும் இதயத்தால் மற்றவரை விட தொலைவில் இருக்கலாம். ஆங்காங்கே சிதறி இருக்கும் நூறு பேர் இதயத்தால் இணைந்தே இருக்கலாம். பாவ வழியினால் இயேசுவின் இதயத்தை விட்டு விலகி இருக்கும் மக்களை இறைவன் தேடிவருகிறார்.
Tags:    

Similar News