search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர் வாம்பியர் மரணம் பற்றி நான் சொன்னதை தவறாக புரிந்துகொண்டார்கள்- டிரம்ப்
    X

    மாணவர் வாம்பியர் மரணம் பற்றி நான் சொன்னதை தவறாக புரிந்துகொண்டார்கள்- டிரம்ப்

    வடகொரிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் வாம்பியர் மரணம் குறித்து தான் வெளியிட்ட கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதாக டிரம்ப் தெரிவித்தார். #Trump #Kimyangun #OttoWarmbierDead
    வாஷிங்டன்:

    வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் போக்கு வலுவடைந்ததால், வட கொரியா மீது பல்வேறு தடைகளை அமெரிக்கா விதித்தது. அதன்பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதால் பதற்றம் சற்று தணிந்தது. சமீபத்தில் இரு தலைவர்களும் வியட்நாமில் சந்தித்து பேசினர். அப்போது, பொருளாதார தடையை முழுமையாக நீக்க வேண்டும் என வடகொரியா முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து டிரம்ப்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வட கொரியாவில் கைது செய்யப்பட்ட அமெரிக்க மாணவர் ஓட்டோ வாம்பியர் மரணம் குறித்து வடகொரிய தலைவர் கிம்மிடம் பேசினீர்களா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த டிரம்ப், ‘மாணவர் ஓட்டோ வாம்பியருக்கு வடகொரிய சிறையில் அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து கிம்மிடம் கேட்டேன். அவருக்கு இந்த வழக்கு பற்றி எல்லாம் தெரியும். ஆனால், சிறையில் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து தனக்கு தாமதமாகவே தெரிய வந்ததாகவும், இதற்காக மிகவும் வருந்தியதாகவும் தெரிவித்தார். அவரது வார்த்தையை நான் நம்பினேன்’ என்றார்.

    இவ்வாறு டிரம்ப் கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வடகொரிய தலைவருக்கு ஆதரவாக டிரம்ப் பேசியதாக பலர் கருத்து பதிவிட்டனர். வட கொரிய தலைவரின் பக்கம் டிரம்ப் சாய்ந்துவிட்டதாக, மாணவர் வாம்பியரின் பெற்றோரும் விமர்சித்தனர்.

    இதையடுத்து இந்த விவகாரம் குறித்து டிரம்ப் நேற்று நள்ளிரவில் டுவிட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில், மாணவர் வாம்பியர் மரணம் குறித்து தான் வெளியிட்ட கருத்துக்கள்  தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.

    “வடகொரிய தலைவர் கிம்மை சந்தித்தபோது, மாணவர் வாம்பியருக்கு அளிக்கப்பட்ட மோசமான சிகிச்சை மற்றும் அவரது மரணத்திற்கு வடகொரியா பொறுப்பு ஏற்க வேண்டும் என கூறினேன். வடகொரியாவில் சிறையில் அடைக்கப்பட்ட மாணவர் வாம்பியர் மற்றும் 3 பேரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்தேன். இந்த விஷயத்தில் முந்தைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    வடகொரியாவின் தவறான அணுகுமுறையே ஓட்டோவின் மரணத்திற்கு காரணம். ஓட்டோ சாதாரணமாக உயிரிழந்திருக்க மாட்டார். ஓட்டோ மற்றும் அவரது குடும்பத்தினர், எதிர்காலத்தில் மன தைரியத்துக்கான சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இது நீண்ட நாட்களுக்கு பேசப்படும்.  ஓட்டோவை நான் மிகவும் நேசிக்கிறேன், அவரை அடிக்கடி நினைக்கிறேன்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க மாணவர் ஓட்டோ வாம்பியர், 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் வட கொரியா சென்றிருந்தபோது, பியோங்யாங் ஹோட்டலில் இருந்த வட கொரிய அரசின் பதாகைகளை கிழித்த குற்றத்திற்காக அந்நாட்டு அரசு அவரைக் கைது செய்தது. பின்னர் உளவு பார்த்தாக கூறி 15 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. சிறையில் அவரது உடல்நிலை மோசமடைந்து, கோமா நிலைக்குச் சென்ற நிலையில், அவர் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் விடுவிக்கப்பட்டார். அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு வாரத்தில் வாம்பியர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. #Trump #Kimyangun #OttoWarmbierDead
    Next Story
    ×