search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அன்னான் மறைவுக்கு கானா நாட்டில் ஒருவார துக்கம் - ஐ.நா. பொது செயலாளர் இரங்கல்
    X

    கோபி அன்னான் மறைவுக்கு கானா நாட்டில் ஒருவார துக்கம் - ஐ.நா. பொது செயலாளர் இரங்கல்

    ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மறைவுக்கு அவரது தாய்நாடான கானாவில் ஒருவாரம் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. #Ghanamourning #RIPKofiAnnan
    அக்ரா:

    ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்தவர் கோபி அன்னான். கானா நாட்டில்  8-4-1938 அன்று பிறந்த இவர் 1-1-1997 அன்று இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 31-12-2006 அன்று ஓய்வு பெற்றார். 

    அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக கோபி அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு விருது வழங்கப்பட்டது.

    பதவி ஓய்வுக்கு பின்னர் 23-2-2012 முதல் 31-8 -2012 வரை, சிரியாவிற்கான ஐ.நா. அரபு லீக் கூட்டுச் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார்.

    சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியிருந்த கோபி அன்னான்(80) உடல்நலக்குறைவால் பெர்ன் நகரில் உள்ள மருத்துவமனையில் இன்று மரணம் அடைந்தார்.

    கோபி அன்னான் மறைவையொட்டி அவர் பிறந்து, வளர்ந்த நாடான கானாவில் ஒருவார காலம் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என கானா அதிபர் நானா அக்குஃபோ-அட்டோ இன்று அறிவித்துள்ளார்.

    ‘கோபி அன்னான் பல வகைகளில் ஐக்கிய நாடுகள் சபையாகவே திகழ்ந்தார்’ என்று புகழாரம் சூட்டியுள்ள ஐ.நா.சபை பொது செயலாளர் அன்ட்டோனொயோ குட்டெரஸ், ‘அவரை எனது நல்ல நண்பராகவும், வழிகாட்டியாகவும் பெற்றமைக்காக பெருமை கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். 

    இதேபோல், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சஞ்சேஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #Ghanamourning #RIPKofiAnnan
    Next Story
    ×