search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் குண்டுவெடிப்பு - பலி எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு
    X

    பாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் குண்டுவெடிப்பு - பலி எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

    பாகிஸ்தானின் மஸ்தாங் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. #MastangBlast
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றம் மற்றும் சில மாகாண சட்டசபைகளுக்கு வரும் 25–ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    தேர்தல் பிரச்சாரத்தின் போது சில அரசியல் கட்சி தலைவர்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பட்டியல் வெளியிட்டு, தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.

    இதற்கிடையே,  கடந்த 10-ம் தேதி கைபர் பக்துன்வா மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் அவாமி தேசிய கட்சி மூத்த தலைவர் ஹாரூண் பிலோர் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.

    இதேபோல், மஸ்தாங் மாவட்டத்தில் பலுசிஸ்தான் அவாமி கட்சியின் பேரணியை குறிவைத்து இன்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.

    பலுசிஸ்தான் மாகாணம் மஸ்தாங்கில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தொகுதி வேட்பாளர் மிர் சிராஜ் ராய்சானி உள்பட  33 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், மஸ்தாங்கில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், இந்த தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர்  காயமடைந்துள்ளனர், அவர்களில் 15 பேர் வரையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விசாரணையில், 8 முதல் 10 கிலோ எடைகொண்ட வெடிபொருள் வெடிக்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

    இதேபோல், இன்று காலை வடக்கு வாஜிரிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பான்னு என்ற இடத்தில்  தேர்தல் பிரச்சார மேடை அருகே நடந்த குண்டுவெடிப்பில் இஸ்லாமிய கட்சி தலைவர் காயங்களுடன் தப்பினார். அதே நேரத்தில் வேறு 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

    பாகிஸ்தானில் தேர்தலையொட்டி வன்முறை அதிகரித்து உள்ளது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×