search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை தாக்குதல் குறித்து நவாஸ் கருத்து - தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்திற்கு பாக். ராணுவம் அழைப்பு
    X

    மும்பை தாக்குதல் குறித்து நவாஸ் கருத்து - தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்திற்கு பாக். ராணுவம் அழைப்பு

    மும்பை தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்களை நவாஸ் ஷெரீப் கூறியதையடுத்து, தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தை கூட்டி ஆலோசிக்கும்படி ராணுவம் தெரிவித்துள்ளது. #MumbaiAttacks #Nawaz #PakistanNSC
    இஸ்லாமாபாத்:

    மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டி வரும் நிலையில், அதனை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில், மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உண்டு என்பதை அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பாக ‘தி டான்’ பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், “பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளன. அவர்களை அரசு சாராதவர்கள் என்று சொல்லலாம். அவர்கள் எல்லை தாண்டிச்சென்று, மும்பையில் தாக்குதல் நடத்தி மக்களில் 150 பேரை கொல்ல நாம் அனுமதித்து இருக்கலாமா?” இதை எனக்கு விளக்குங்கள். இந்த வழக்கு விசாரணையை நம்மால் முடிக்க முடியாதா?” என்று கேள்வி எழுப்பினார்.

    இந்த விவகாரம் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் நவாஸ் ஷெரீப் கருத்து அமைந்துள்ளதால் தேசிய பாதுகாப்பு தொடர்பாக உயர்மட்ட குழு கூட்டத்தை பாகிஸ்தான் ராணுவம் கூட்டியுள்ளது. மும்பை தாக்குதல் குறித்து ஊடகங்களில் சமீபத்தில் வெளியான தகவல்கள் குறித்து ஆலோசனை நடத்தும்படி பிரதமர் அப்பாசியைம் ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது. ராணுவம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. #MumbaiAttacks #Nawaz #PakistanNSC
    Next Story
    ×