search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகத்திரையை கிழிப்பேன் - ஓப்ரா வின்பிரே மீது எகிறிப்பாயும் டொனால்ட் டிரம்ப்
    X

    முகத்திரையை கிழிப்பேன் - ஓப்ரா வின்பிரே மீது எகிறிப்பாயும் டொனால்ட் டிரம்ப்

    தொலைக்காட்சி பேட்டியை தனக்கு எதிராக வாக்குமூலங்களை பதிவு செய்யும் வகையில் அமைத்திருந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி ஓப்ரா வின்பிரேவை தோற்கடித்து ஓட வைப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். #OprahWinfrey
    வாஷிங்டன்:

    இந்த ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் வெளிநாட்டு பத்திரிகைகள் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்படும் ‘செசில் பி. டெ மில்லே விருது’ ஆப்பிரிக்க - அமெரிக்க நடிகையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், தொகுப்பாளர் மற்றும் கொடையாளருமான ஓப்ரா வின்பிரே-வுக்கு வழங்கப்பட்டது.

    இவ்விருதினை பெற்ற பின்னர் ஏற்புரை ஆற்றிய ஓப்ரா வின்பிரே, பல ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலாக ஆஸ்கர் விருதை ஒரு கருப்பின நடிகர் பெற்றபோது வீடுகளில் பாத்திரம் கழுவும் பணிப்பெண்ணாக வேலை செய்த ஏழை ஆப்பிரிக்க தாய்க்கு பிறந்த மகளாக தான் பார்த்து பரவசப்பட்ட அனுபவத்தை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.



    பின்னர், வாழ்வின் பல படிநிலைகளை கடந்து கஷ்டப்பட்டு முன்னேறியபோது ஆணாதிக்க சமுதாயத்தால் பெண்களுக்கு நேரும் கொடுமைகளை அறிய நேர்ந்ததையும், இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்ப முன்னர் பாதிக்கப்பட்ட பெண்கள் தயங்கிய நிலை தற்போது மாறியுள்ளதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    தங்களுக்கு நேரும் கொடுமைகளை தோலுரித்துக்காட்ட நமது பெண்கள் தயாராகி விட்டனர். பூமிக்கும் வானத்துக்கும் இடையில் புதியநாள் உதயமாகி விட்டது என்பதை இந்த (கோல்டன் குளோப் விருது வழங்கும்) காட்சியை பார்த்து கொண்டிருக்கும் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் ஓப்ரா வின்பிரே பலத்த கரவொலிக்கு இடையில் கூறினார்.

    சுமார் பத்து நிமிடங்கள் உரையாற்றிய அவரது கருத்துகளுக்கு இடையில் அரங்கத்தில் திரண்டிருந்த ஆண் - பெண் இருபாலரும் பலத்த கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களில் ஒளிபரப்பானது. அன்றிலிருந்து அமெரிக்க மக்களிடையே ஓப்ரா வின்பிரேவின் செல்வாக்கு அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது. 

    பெண்ணியக்கவாதியான ஓப்ரா வின்பிரே பெண்களை இழிவாக பேசும் அதிபர் டிரம்பை எதிர்த்து போட்டியிட்டால் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்ற யூகச்செய்திகளை அங்குள்ள ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இதற்கு, நேரிடையாக மறுப்பு தெரிவித்துவரும் ஓப்ரா வின்ப்ரே தற்போது அது தொடர்பாக பரீசிலிக்கப் போவதாக கூறிவருகிறார்.

    இந்நிலையில், பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேர்காணலாளராக சமீபத்தில் அவதாரம் எடுத்த ஓப்ரா வின்பிரே, அதிபர் டிரம்பின் ஓராண்டு ஆட்சி முடிவடைந்துள்ள நிலையில், அவரது அரசு சார்ந்த கொள்ளை முடிவுகள் மற்றும் செயல்பாடு தொடர்பாக பேட்டி ஒன்றை ஏற்பாடு செய்தார். 

    இதில், குடியரசுக்கட்சி, ஜனநாயகக்கட்சி மற்றும் கட்சி சாராத வாக்காளர்கள் 14 பேர் பங்கேற்றனர். சமீபத்தில் வெளியான இந்த பேட்டி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.



    இந்த பேட்டியின் போது, டிரம்ப்புக்கு எதிரான கருத்துக்கள் வெளிப்படும் வகையில் பேட்டியின் பாணியை ஓப்ரா வின்பிரே உருவாக்கி இருந்ததாக ஆளுங்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஓப்ரா வின்பிரேவின் பேட்டியால் கடும் ஆத்திரமடைந்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் மீது எரிந்து விழுந்துள்ளார்.

    “எனக்கு முன்னர் நன்கு அறிமுகமான ஓப்ரா வின்பிரேயின் 60 நிமிட பேட்டியை பார்த்தேன். கேள்விகளின் பதில்கள் எனக்கு எதிராக அமையுமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த விபரங்களும் தவறானவை. ஓப்ரா என்னை எதிர்த்து போட்டியிட்டால் அவரது முகத்திரையை கிழித்து, மற்றவர்களை தோற்கடித்தது போல் அவரையும் தோற்கடித்து காட்டுவேன்” என டிரம்ப் காரசாரமாக பதிவிட்டுள்ளார். #OprahWinfrey #Trump #TamilNews
    Next Story
    ×